ஆஹா... ஆச்சரிய கண்ணாடி பாலம்... கட்டணத்தை குறைக்க கோரிக்கை!


கேரள மாநிலம் இடுக்கியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து உள்ள நிலையில் நுழைவு கட்டணத்தை 250 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக குறைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் அதில் முக்கியமான தலமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமன் இருந்து வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள வாகமன் பகுதியில் பச்சை பசேல் என இருக்கும் மலை குன்றுகள், சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் ஒன்றாக இருந்து வருகிறது. இது தவிர பேராக்லைடிங், அட்வென்சர் ஜோன், பர்மா பிரிட்ஜ், ரோஸ் பார்க் என சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்க ஏராளமான அம்சங்களை மாநில அரசு நிறுவியுள்ளது. இதனிடையே கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கண்ணாடி பாலத்தை கேரள மாநில சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 6ம் தேதி முதல் இந்த கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இணையதளங்களில் மட்டுமே பார்த்து பழகிய இதுபோன்ற கண்ணாடி பாலத்தை நேரில் பார்வையிடுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து தற்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

முதலில் நுழைவு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதால் 250 ரூபாயாக குறைக்கப்பட்டது. இருப்பினும் கண்ணாடி பாலத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவதால், நுழைவுக் கட்டணம் அதிகம் என கருத்து தெரிவித்துள்ள சுற்றுலா பயணிகள் இதனை 100 ரூபாயாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

x