எகிறிய பீட்ரூட் விற்பனை... காய் வடிவில் ஓர் இயற்கை வயாகரா?


இல்லறத்துக்கு ஊக்கியா பீட்ரூட்?

பாலியல் செயல்பாடுகளில் ஊக்கியாக உதவுவதாக பீட்ரூட் காயை முன்வைத்து கிளம்பியிருக்கும் தகவல்கள் அவை குறித்தான அறிவியல் ஆய்வையும் கோரி இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவை மையமாக்கி பீட்ரூட் காய்க்கு திடீர் தட்டுப்பாடு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய சூப்பர் மார்க்கெட்டுகளில் டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பீட்ரூட் விற்பனை சதா பற்றாக்குறையில் நீடிக்கிறது. ’ஈபே’ போன்ற ஆன்லைன் தளங்களில் பீட்ரூட் சிறிய டின் விலை 65 ஆஸ்திரேலிய டாலர்களை எட்டியுள்ளது.

சாறு வடிவிலும் பீட்ரூட்

உணவுப்பொருளாக பீட்ரூட் உடலின் சேர்வதன் மூலம், பாலியல் செயல்பாடுகளில் ஊக்கியாக அமைவதாகவும், இதற்கு ஆதிகாலம் முதல் சான்றுகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் தொடங்கி தினசரி உடற்பயிற்சியில் மேம்பாடு வரை, பீட்ரூட்டின் வெளிப்படையான ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். ஆனால் பாலியல் ஊக்கியாக பீட்ரூட் உதவும் என்பது அதன் விலை எகிறல் மற்றும் விற்பனையில் பற்றாக்குறை வரை காரணமாகி இருக்கின்றன.

பீட்ரூட்டில் வைட்டமின் பி மற்றும் சி, தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற உட்பொருட்கள் நிறைந்துள்ளன. நேரடி சமையல் உபயோகம் மட்டுமன்றி காப்ஸ்யூல்கள், பொடிகள், சிப்ஸ் அல்லது ஜூஸ் மூலமாகவும் அதன் வெகுஜன பயன்பாடு அதிகரித்து வருகிறது. இவற்றின் மத்தியில் ரோமானியர் காலத்திலிருந்தே பீட்ரூட் சாறு பாலுணர்வு ஊக்கியாக பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் செரிமானத்தில் நைட்ரிக் ஆக்சைடாக மாறும்போது, ரத்த நாளங்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த நைட்ரிக் ஆக்சைடு, மருத்துவ அறிவியலில் உடலுறவுக்கு முன்னும் பின்னும் ஆண்களின் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதில் டெஸ்டோஸ்டிரோனை வெகுவாய் ஆதரிக்கிறது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பீட்ரூட்டின் திறன் இதயம் மற்றும் இரத்த நாளங்களின் சுற்றோட்ட அமைப்புக்கு பயனளிக்கும். இந்த வகையில் ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் பாலியல் சார்ந்து சாதகம் சேர்க்கும். இவ்வாறாக பீட்ரூட்டுக்கும், உடலுறவு தயார்நிலைக்கும் இடையிலான தொடர்பு அடையாளம் காணப்படுகிறது. உணவில் கணிசமாக பீட்ரூட் இடம்பெறுவது பொதுவான ஆரோக்கியத்துக்கும், தம்பதியரின் பாலியல் வாழ்க்கைக்கும் உதவுவதாக அமையும்.

பீட்ரூட்

ஆனால், அது மனிதர்கள் மத்தியிலான பாலியல் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்குமென எதிர்பார்க்க வேண்டாம் என்பது மருத்துவ ஆய்வின் இறுதி முடிவாக இருக்கிறது. எனினும், பீட்ரூட் என்னும் சாதாரண காய்க்கு மகத்துவம் சேர்க்க இதுவே போதுமானதாக அமைந்துள்ளது. மேலும் ரத்த அழுத்த பிரச்சினைக்காக, உணவே மருந்தாகவும், தடகள வீரர்களுக்கான சிறப்புணவாகவும் பீட்ரூட்டின் அருமைகள் அதிகம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

இவற்றின் அடிப்படையில் பீட்ரூட் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகியவை பல நாடுகளில் எழுந்துள்ளன. இந்தியாவில் இப்போதுதான் இது குறித்தான விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. விரைவில் உச்ச விலை காணும் காய்கறிகளின் வரிசையில் பீட்ரூட்டையும் இந்தியர்கள் தரிசிக்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்வது ஏன்?... மத்திய பாஜக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!

x