இந்தியாவில் விற்கும் 48 மருந்துகள் தரமற்றவை... மத்திய கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!


மாத்திரைகள்( மாதிரி படம்)

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்தியாவில் விற்கப்படும் 48 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

மாத்திரைகள்

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தால் 1,166 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் கிருமித் தொற்று, இரைப்பை அழற்சி, காய்ச்சல், சளி, பாக்டீரியா தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 48 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், குஜராத், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

மாத்திரைகள்

இதையடுத்து, அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களின் நோயை தீர்க்கும் என்று நம்பி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு அந்த மருந்துகள் தரமற்றவையாக இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x