கும்பக்கரை அருவிக்கு வராதீங்க... தொடர் வெள்ளப்பெருக்கால் குளிக்கத்தடை!


கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களில் கும்பக்கரை அருவி முக்கியமானது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் குளிர்ச்சியான நீரில் குளித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் காட்சியளிப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்றாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வார விடுமுறைக்கு இங்கு வந்து குளிக்க திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள், இந்த தடை காரணமாக ஏமாற்றமடைந்துள்ளனர். தேனி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்து வரும் தொடர்மழையால் தேனி மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

x