'50 அடி டவரில் இருந்து குதித்து விடுவோம்'... 75 வயது முதியவர்கள் இருவரால் பரபரப்பு!


டவரில் ஏறிய முதியவர்களை கீழே இறங்கச்சொல்லும் போலீஸ்.

நிலத்தை அளவீடு செய்து கொடுக்காததைக் கண்டித்து 50 அடி உயர செல்போன் கோபுரத்தில் 75வயது முதியவர்கள் இருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள ஜானி உபர்லி கிராமத்தைச் சேர்ந்த 2 முதியவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள 50 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறினர். தங்கள் நிலங்களை அளவீடு செய்து தராத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

அத்துடன் இப்பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர்.

இதுகுறித்து போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், முதியவர்கள் இருவரையும் செல்போன் டவரில் இருந்து இறங்கி வருமாறு கூறினர். ஆனால், சம்பந்தப்பட்ட தாசில்தார் வந்தால் தான் கீழே இறங்குவோம் என்று கூறினர். சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார். பயிர்கள் விளையும் நிலங்களில் அளவீடு செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறினார்.

அப்போது டவரில் ஏறியவர்களின் குடும்பத்தாருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து 75 வயது நிரம்பிய அந்த இரண்டு முதியவர்களையும் டவரில் இருந்து கீழே இறங்கச் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பல மணி நேரமாக பதற்றம் நிலவியது. சம்பந்தப்பட்ட இரண்டு முதியவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x