விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்... 300-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் நாசம்!


தென்னை மரங்கள் சேதம்

மேட்டுப்பாளையம் அருகே, விவசாய நிலத்திற்குள் புகுந்த யானைக் கூட்டம் 300-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைச் சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்கள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ளது தோலம்பாளையம் கிராமம். இங்கு வாழை, தென்னை போன்றவை பிரதானமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இக்கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம்.

மலைக்காட்டை விட்டு வெளியேறும் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் இங்குள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்கள்

இந்நிலையில், தோலம்பாளையம் மற்றும் இதனை ஒட்டியுள்ள ஆதிமாதையனூர் கிராமப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு யானைக் கூட்டம் விளைநிலங்களுக்குள் நுழைந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பிடுங்கி சேதப்படுத்தியது. தொடர்ந்து பயிர்களைச் சேதப்படுத்தி வரும் யானைகளால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்கள்

கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருக்கும் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் காட்டு யானைகள் சேதப்படுத்திய பகுதிக்குச் சென்ற மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதுடன், உரிய இழப்பீடு அரசு மூலம் பெற்று தரப்படும் என உறுதியளித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

நிவாரணப் பொருட்களை அனுப்ப கட்டணம் கிடையாது... தமிழக அரசு அறிவிப்பு!

x