சட்டை அழுக்காக இருப்பதால் ரயிலில் ஏறக்கூடாது... பயணியைத் தடுத்து அவமானப்படுத்திய மெட்ரோ ஊழியர்கள்!


மெட்ரோ ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட்ட பயணி.

பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வந்த பயணி ஒருவரின் சட்டையில் பட்டன் இல்லை என்றும், அவர் உடை சுத்தமாக இல்லை என்று கூறி அவரை உள்ளே விடாமல் ஊழியர்கள் அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தொட்டகல்சந்திரா மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்ய வந்த பயணி ஒருவரை பெங்களூரு மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் அணிந்திருந்த உடை சுத்தமாக இல்லை என்று கூறியதுடன், சட்டையில் பட்டன்கள் இல்லை என்று கூறி அவரை ரயிலில் பயணம் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதை பார்த்த சக ரயில் பயணி ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அத்துடன் இந்த வீடியோவை பெங்களூரு பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா மற்றும் பிஎம்ஆர்சிஎஸ்சை டேக் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், தடுக்கப்பட்ட பயணியிடம், உங்கள் சட்டை பட்டனைப் போட்டு உடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில் உள்ளே செல்ல விடமாட்டோம் என மெட்ரோ ஊழியர்கள் திட்டியுள்ளனர். மெட்ரோ ஊழியர்களின் இந்த செயலுக்கு கண்டனம் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு இதே போன்ற சம்பவம் மெட்ரோ ரயிலில் ஏற்கெனவே நடந்துள்ளது. பிப்ரவரி 26-ம் தேதி விவசாயி ஒருவரின் ஆடை சுத்தமாக இல்லை என்று மெட்ரோ ரயிலுக்குள் செல்லவிடாமல் ஊழியர்கள் தடுத்துள்ளனர்.

ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின் போது, தலையில் மூட்டையுடன் வந்த விவசாயியை உள்ளே விடாமல் ரயில் ஊழியர்கள் அவமானப்படுத்தியதையும் சக பயணி வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட போது கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் அந்த ஊழியர்களை பிஎம்ஆர்சிஎஸ் சஸ்பெண்ட் செய்தது. அத்துடன் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் வருத்தம் தெரிவித்தது.

இந்த நிலையில், மீண்டும் மெட்ரோ ரயில் ஊழியர்களால், ஒரு பயணி அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மாம்பழமா, மைத்துனரா?: கடலூரில் கரையேறப் போவது யார்?

x