தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும்! கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடாமல் அடம் பிடித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை 45 அடிக்கும் கீழே போய் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. டெல்டாவில் மூன்று லட்சம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள குருவை சாகுபடி முற்றிலுமாக கருகிப் போய்விட்ட நிலையில் இந்த மாதம் துவக்கத்திலேயே தொடங்க வேண்டிய சம்பா சாகுபடி பணிகளும் இதுவரை தொடங்கவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டபோதும் அதை முறைப்படி செயல்படுத்த கர்நாடக அரசு தவறி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

காவிரி நீர்

இந்த நிலையில் போதிய நீர் இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி நீர் திறக்க இயலாது என்றும் காவிரியிலிருந்து 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடகா அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கவாய், பிஎஸ் நரசிம்மா , பிகே மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரணை தொடங்கியது.

தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகினர். அப்போது தமிழக அரசு சார்பில் காவிரியில் சொற்ப நீரைத்தான் கர்நாடகா திறந்து விடுகிறது. 12,500 கன அடிநீரை கர்நாடகா திறக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

அப்போது கர்நாடகா அரசு வழக்கறிஞர், கர்நாடகாவில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது என்றார். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான ரோத்தகி, கர்நாடகாவில் மழை குறைவுதான் என்பதை ஏற்கிறோம். மழை குறைவான காலத்துக்கான நீர் பகிர்வு விவரம் ஏற்கெனவே உள்ளது. அதை நீதிமன்றமும் வரையறுத்துள்ளது. அந்த நீரைக் கூட திறக்கவில்லையே என கேள்வி எழுப்பினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர். அதேபோல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கையும் நிராகரித்தனர். வறட்சி கால அட்டவணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

x