உள்நாட்டில் அரிசி விலையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு நேரடியாக அரிசி சந்தையில் தலையிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் தேசம் தழுவிய வகையில் பாஸ்மதி அல்லாத இதர அரிசிகளின் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, பாஸ்மதி அல்லாத அரிசிகளின் விலையின் நிலைமையை மதிப்பிடுவதற்கான சிறப்பு கூட்டத்தில், அரிசியின் சில்லறை விலையை உடனடியாக குறைக்குமாறு அழுத்தம் தந்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், உள்நாட்டு அரிசி விலையை நிலைப்படுத்தவும், நியாயப்படுத்தவும் தொழில்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோப்ரா வலியுறுத்தினார். இந்திய உணவுக் கழகத்திடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் இருந்தபோதும், அரிசி ஏற்றுமதி மீதான தடை நடப்பில் இருந்தபோதிலும், உள்நாட்டு சந்தையில் பாஸ்மதி அல்லாத அரிசிகளின் விலை அதிகரித்து வருவது மத்திய அரசுக்கு குழப்பத்தையும், கவலையையும் தந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரிசிக்கான வருடாந்திர பணவீக்கம் 10% அதிகமாக அதிகரித்துள்ளது. தொடரும் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிகவும் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. ஓபன் மார்க்கெட் விற்பனைத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ ரூ. 29க்கு கிடைக்கும் உயர்தர அரிசி, அரசின் கையிருப்பில் உள்ளது. எனினும் சில்லறை சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.43 முதல் 50 வரை விற்பனை ஆகிறது.
உள்நாட்டு அரிசி விநியோகத்தைத் தக்கவைத்து விலையைக் குறைக்கும் முயற்சியில், ஜூலை 2023-ல் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு அமல்படுத்தியது. கூடவே ஏற்றுமதி வரிகளும் கணிசமாக உயர்த்தப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் அமலில் இருந்தபோதிலும், தொடர்ந்து அரிசியின் விலையேற்றம் கணிசமான கவலைகளை எழுப்பியுள்ளது. எனவே உள்நாட்டு அரிசி சந்தையை இயக்குவோரிடம் நேரிடையாக அரசு பேசத் தொடங்கியுள்ளது. பதுக்கல் உள்ளிட்ட ஆதாயம் தேடும் முறைகேடுகள் அறியப்பட்டால் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்ற எச்சரிக்கையும் இந்த சந்திப்பில் வெளியிடப்பட்டது.
பிரதான உணவுப்பொருளான அரியின் விலை குறையும்போது, ஒட்டுமொத்தமாக பணவீக்கத்தில் அவை எதிரொலிக்கவும், தேர்தல் சமீபத்தில் விலைவாசி உயர்வு அபாயங்களை தவிர்க்கவும் பாஜக அரசு தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.