முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதோடு, அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருவதால், 142 அடியை எட்டுவதற்கு முன்பே நாளை காலை அணையைத் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 152 அடியாகும். ஆனால், அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. 136 அடியில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 138 அடியில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 140 அடியில் இருந்து ஒவ்வொரு அடிக்கும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியைக் கடந்தது. இதையடுத்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
அணைக்கு நீர்வரத்து குறைந்திருந்த நிலையில், தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, இன்று 138 அடியை எட்டியது. இதையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் 142 அடியை அணை எட்டும் முன்பே, அணையின் ஷட்டர்கள் மூலம் நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி நாளை காலை அணையிலிருந்து நீர் திறக்கப்பட உள்ள நிலையில், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் இறங்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது அணைக்கு விநாடிக்கு 8,867 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வெளியேற்றம் 1,867 கனஅடியாக உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...