கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் - மத்திய அரசு உத்தரவு!


கரும்புச்சாற்றைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்க விதிக்கப்பட்ட தடையை தற்போது மத்திய அரசு நீக்கியுள்ளது.

2023-24-ம் விநியோக ஆண்டில் (நவம்பா் முதல் அக்டோபா் வரை) எத்தனால் உற்பத்திக்கு கரும்புச்சாற்றைப் பயன்படுத்த கடந்த டிசம்பர் 7-ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. உள்நாட்டுச் சந்தையில் போதிய அளவு சா்க்கரை விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும், அதன் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த தடையை நீக்கி மத்திய உணவுத் துறை வெள்ளிக்கிழமை உத்தரவு வெளியிட்டது. இதன் மூலம் 2023-24-ம் விநியோக ஆண்டில் கரும்புச்சாறு மூலம் எத்தனால் தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2023-24-ஆம் விநியோக ஆண்டில் 7.25 சதவீதம் கரும்பு, 50 சதவீதம் நொதிக்கக்கூடிய சா்க்கரையை உள்ளடக்கி தயாரிக்கப்படும் சா்க்கரைப்பாகு மூலம், பசுமை எரிபொருள் தயாரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரும்பு அறுவடை

எண்ணெய் நிறுவனங்கள் கூறுவதற்கு ஏற்ப சா்க்கரை ஆலைகளும், சா்க்கரைப்பாகை மூலச்சரக்காகக் கொண்டு செயல்படும் ஆலைகளும் எத்தனாலை கட்டாயம் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மத்திய உணவுத் துறை, எரிசாராயம் மற்றும் கலப்படமில்லாத சுத்தமான மதுபானம் தயாரிக்க கரும்புச்சாறு மற்றும் சா்க்கரைப் பாகை மடைமாற்றம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

x