ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்... குஜராத் பரிதாபம்!


ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை

குஜராத் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவு காரணமாக ஆண்டுதோறும் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்திய மாநிலங்களின் மத்தியில் வளர்ச்சி மற்றும் மக்கள் முன்னேற்றத்துக்கான அடையாளமாக குஜராத் முன்னிறுத்தப்பட்டது. இதனால் வளர்ச்சியின் நாயகனாக புகழ் பெற்றிருந்த குஜராத் முதல்வர் மோடி, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நின்றபோது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதன் பின்னரான மத்திய அரசின் தரவுகளே, குஜராத்தின் பலதரப்பட்ட பின்னடைவுகளை வெளிச்சம் போட்டுக்காட்டின. அவற்றில் தற்போது, ஊட்டச்சத்து இல்லாது பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் - கோப்பு படம்

ஊட்டச்சத்து குறைவு காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகள் தொடர்பாக மக்களவை எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய அரசு சார்பில் வெளிடப்பட்ட தகவல்கள் இந்த உண்மையை பறைசாற்றியுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட 4.25 லட்சம் குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்ட தரவுகள் அடிப்படையில் காங்கிரஸ் எம்பிக்கள் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.

கடந்த நிதியாண்டில் மட்டும் குஜராத் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18,978 குழந்தைகள் பாதிக்கப்பட்டன. இது முந்தைய நிதியாண்டின் எண்ணிக்கையான 13,048 என்பதை விட அதிகமாகும். அதற்கும் முந்தைய 2020-21-ம் நிதியாண்டில் 9,606 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து

2 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரத்தோடு ஒப்பிடுகையில், ஊட்டச்சத்து குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுமார் 2 மடங்காக குஜராத்தில் எகிறியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. மொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41,632 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வழங்கிய தரவுகள் தெரிவித்துள்ளன.

இது மட்டுமன்றி குஜராத்தில் வருடந்தோறும் பிறக்கும் சுமார் 12 லட்சம் குழந்தைகளில் 30 ஆயிரம் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இன்றி பலியாவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

x