அதிர்ச்சி.... திருவாரூரில் மருத்துவ மாணவி உட்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு


டெங்கு பாதிப்பு

திருவாரூரில் அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி பெண் மருத்துவர் டெங்கு காய்ச்சலால் பலியான நிலையில் இன்று மட்டும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெங்குவினால் உயிரிழந்த மாணவி சிந்து

திருவாரூரில் டெங்கு பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த சிந்து டெங்குவால் உயிரிழந்தார். இதனையடுத்து இங்கு தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இன்று மட்டும் ஹோமியோபதி மருத்துவ மாணவி உட்பட 5 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் 20 பேர் காய்ச்சல் காரணமாக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 9 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் மழைக்கால நோய்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. வழக்கமாக வரும் சளி, இருமல், காய்ச்சல் இவைகளுடன் டெங்கு, நிஃபா வைரஸ்களும் பரவத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

x