பெண்கள் உடல் ஆரோக்கியத்தை உடனிருந்து கண்காணிக்க ஒரு ஸ்மார்ட் சாதனம்; ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை


பெண்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவும் நடத்து சாதனங்களில் ஒன்று

பெண்களின் மாதவிடாய் சுழற்சி, மகப்பேறு, மெனோபாஸ் மற்றும் பல்வேறு ஆரோக்கியத் தேவைகளை கண்காணிக்கவும், சிகிச்சை அளிக்கவும் உதவும் வகையிலான ஒரு சாதனம் விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது.

மனித உடல் என்பது ஒரு வேதித் தொழிற்சாலைக்கு நிகரானது. ஹார்மோன்கள் முதல் இதர சுரப்புகள் வரை உற்பத்தி செய்யும் வேதிப் பொருட்களும், அவை உடலியக்கம் முதல் வளர்சிதை மாற்றம் வரை பிரதிபலிக்கிறது. இவையே மனித உயிரியின் உடல் மற்றும் மனதின் மாற்றங்களாக தென்படுகின்றன. அதிலும் ஆணைவிட பெண்ணின் உடலில் வேதிவினைகள் அதிகம். இன்னொரு உயிரை காபந்து செய்யும் தேகம் என்பதால், ஆணைவிட அங்கே ஹார்மோன் திருவிளையாடல்கள் அதிகமிருக்கும்.

ஆரோக்கிய கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு

அப்படியான பெண்ணின் தேகத்தை இந்த டிஜிட்டல் யுகத்தில் கண்காணிக்க என ஏராளமான ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் சந்தையில் கிடைத்து வருகின்றன. சாதாரண ஸ்மார்ட் வாட்சுகள் முதல் பிரத்யேக டிஜிட்டல் மருத்துவ சாதனங்கள் வரை அவை அடங்கும். அவை அனைத்துக்கும் சிகரம் வைத்தார்போன்று ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கும் கேட்ஜெட் ஒன்று எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஸ்காட்லாந்தின் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த சாதனம், பெண்களின் இயல்பான உடல் நலன், ஹார்மோன் சுரப்பு, நோய்க்கான அறிகுறிகள், மாதவிடாய் முதல் மகப்பேறுக்கான வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை உடனிருந்து கண்காணிக்கும். அது மட்டுமன்றி ஹார்மோன் எழுச்சி அல்லது வறட்சி காரணமாக, மனநிலையில் ஏற்படும் மாற்றங்களையும் முன்னறியலாம்.

இவற்றுக்கு அப்பால் தூக்கத்தின் சுழற்சி, கருவுறுதலுக்கான தினங்களை கண்காணிக்கவும் உதவும். பெண்கள் கருவுறுதலில் அதிக சவால்களுக்கு காரணமாகும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் தொடர்பான கண்காணிப்புக்கும் இந்த சாதனம் இனி உதவும். குறிப்பாக குழந்தைப் பேறுக்காக காத்திருப்போரும், அது தொடர்பான சிகிச்சையில் இருப்போரும் தங்கள் உடல்நலனை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். அதே வேகத்தில் அனுமதியளித்தால், அப்போதைய ஆரோக்கிய நிலவரங்களை தங்களது மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவருக்கு தெரிவிக்கவும் செய்யும்.

தூங்கும்போதும் பெண் உடல்நலனை கண்காணிக்கும் ஸ்மார்ட் சாதனம்

இதற்கு அப்பால் மருத்துவர் தேவை மற்றும் கண்காணிப்பை கணிசமாக குறைக்கவும் இந்த கேட்ஜெட் உதவ இருக்கிறது. தகுதியான மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை, ஐரோப்பாவில் மட்டும் 60 சதவீதமாக அண்மையில் உயர்ந்திருக்கிறது. இத்தகைய தாமதங்கள் பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கும். அவ்வாறானவர்களுக்கும் இந்த சாதனம் வெகுவாய் கைகொடுக்கும்.

தேவையைப் பொறுத்து பெண்கள் தங்களது சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனைக்கும் இந்த சாதனத்தை பயன்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகளுக்கான க்ளூக்கோ மீட்டர் போன்று, பரிசோதனைக்கான முந்தைய வரலாற்று அளவீடுகளையும் சேமித்து வைக்கலாம்.

மென்பொருள் மட்டுமன்றி வன்பொருளிலும் கவனம் செலுத்துவதால், இது ஐபோன் அளவில் பாதி மட்டுமே இருக்கும் என்கிறார்கள். ஆராய்ச்சி கட்டத்தை தாண்டி நடைமுறை பரிசோதனைகளில் இருக்கும் இந்த சாதனம் சந்தையில் கிடைப்பதற்கு சில மாதங்கள் முதல் வருடம் வரை ஆகக்கூடும். ஆனால், பெண்ணுலகில் பெரும் மாற்றத்தை இது நிச்சயம் ஏற்படுத்தும் என ஸ்காட்லாந்து அறிவியலாளர்கள் அடித்து சொல்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்!

x