கோடை வெயிலுக்கு குட்பை சொல்லலாம் வாங்க... எளிதில் கிடைக்கும் இவற்றை சாப்பிட்டால் போதும்!


கோடையை வரவேற்கும் தர்பூசணி

அக்னி நட்சத்திரம் இன்னும் அறிவிப்பாகவில்லை. ஆனால் அதற்குள் கோடை அச்சுறுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் நலிவு கண்டவர்களை கோடை கடுமையாக வாட்டுகிறது. ஆரோக்கியமான தேகம் கொண்ட இளைஞர்களும், உடலின் நீரேற்றத்தை முறையாக பராமரிக்காவிடில் வெப்ப அலை அவர்களையும் விட்டு வைக்காது.

கொளுத்தும் வெயில், அக்னி நட்சத்திரம், வெப்ப அலை என எதுவாக இருப்பினும், உடலின் நீரேற்றத்தை முறையாக பராமரிக்கும் வகையில் உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கோடையில் எளிதாகக் கிடைக்கும், நாம் நன்கறிந்த, எளிமையான இவற்றை உணவில் போதுமான அளவுக்கு சேர்த்துக்கொள்வது, கோடையை திடமாக எதிர்கொள்வதற்கான நீரேற்றத்துக்கு உதவும். கூடவே கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விட்டமின், மினரல் உள்ளிட்டவற்றின் பற்றாக்குறையையும் இவை ஈடு செய்யும்.

வெயிலின் தாக்கம்

இளநீர்

செயற்கையான பானங்கள், சோடா, கோலா ஆகியவற்றைவிட இயற்கையாக கிடைக்கும் இந்த அமுது, கோடையில் உடல் இழக்கும் நீர்ச்சத்தினை வெகுவாக ஈடுகட்டும். கூடவே எலக்ட்ரோலைட்டுகளை செறிவோடு வழங்கவும் செய்யும். இயற்கையான என்சைம்கள், தாதுக்கள், விட்டமின்கள் ஆகியவற்றோடு, உடலின் சோடியம் மற்றும் பொட்டசியம் அளவை மீட்டெடுக்கவும் இளநீர் உதவும்.

தர்பூசணி

தர்பூசணியில் 90 சதவீதத்துக்கும் மேலாக நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. கூடவே எலக்ட்ரோலைட்டுகள், அவசியமான விட்டமின்களையும் தர்பூசணி வாரி வழங்கும். உடலின் நீரேற்றத்தை பராமரித்து குளிர்ச்சியாகவும் வைத்திருப்பதில் தர்பூசணிக்கு ஈடுஇணை கிடையாது.

வெள்ளரி

வெள்ளரி

நீர்ச்சத்து அதிகம்; அதே வேளையில் கலோரிகள் குறைவு. எனவே டயட்டில் இருப்பவர்கள் கூட வெள்ளரியை இஷ்டத்துக்கு வெட்டலாம். அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், சாலட் போன்று வேறு உணவுகளுக்கும் உதவியாக சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ, பி மற்றும் கே ஆகியவை வெள்ளரியில் கிடைக்கும்.

தக்காளி

தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. நிறைய தண்ணீர் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளது. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள், தக்காளியை தவிர்க்கலாம்.

தயிர் பொருட்கள்

தயிர் பிடிக்காதவர்கள், அதனை யோகர்ட், மோர், லஸ்ஸி என விரும்பிய வகையில் சேர்த்துக்கொள்ளலாம். காய்கள் அல்லது பழங்கள் சேர்த்து ரைதாவாக தினசரி எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு குளிர்ச்சி சேர்ப்பதோடு, இரைப்பை மற்றும் குடலின் ஆரோக்கிய செயல்பாடுக்கும் உதவும்.

முலாம்பழம்

முலாம்பழம்

முலாம்பழம் குளிர்ச்சியோடு, பலவகையிலான சத்துக்களையும் வழங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, இதய ஆரோக்கியத்தின் மேம்பாடு, பார்வை சீரமைப்பு, உடல் எடைக் குறைப்பு, குடல் ஆரோக்கியத்தின் மேம்பாடு என ஏராளமான அனுகூலங்களை முலாம்பழம் சேர்க்கும்.

கோடையில் எளிதில் கிடைக்கும் இவற்றைக் கொண்டு உடலின் நீரேற்றத்தை முறையாக பராமரிக்கவும், இதர சத்துக்களை பெறவும் செய்யலாம். கோடைநோய்களைத் தவிர்க்க இவை பொதுவான குறிப்புகள் மட்டுமே. தனிப்பட்டோர் தங்கள் உடல்நலன் சார்ந்து இவற்றில் உரியதை தவிர்க்கலாம். உதாரணத்துக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் கொண்டவர்கள் தக்காளியை தவிர்ப்பது நல்லது.

x