ஊட்டி சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்... மலை ரயில் மீண்டும் இயக்கம்!


ஊட்டி மலை ரயில்

மண்சரிவு உள்ளிட்ட காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் இன்று காலை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

மலை ரயில்

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் மண்சரிவு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவது வழக்கம். அப்படி, கடந்த 3-ம் தேதி இரவு பெய்த கனமழையால கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை மலை ரயில் செல்லும் வழித்தடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் கடந்த 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மண் சரிவு சீர்செய்யப்பட்டதை அடுத்து 8-ம் தேதி மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், மீண்டும் கனமழை பெய்ததால் மலை ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண் சரிவும், மண் அரிப்பும் ஏற்பட்டது.

இதனால் கடந்த 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 7 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், மண்சரிவு பாதிப்பு சீர் செய்யப்பட்ட பின் மலை ரயில் சேவை தொடங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டதால் இரண்டு நாட்கள் முன்னதாகவே இன்று காலை முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் கிளம்பிய ரயிலில் பயணிகள் வெகு உற்சாகமாக பயணித்தனர். மீண்டும் மலை ரயில் இயக்கப்படுவதால் ஊட்டிக்கு வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x