செலவை குறைக்கும் விதைப்பு இயந்திரம் - நீலகிரி கேரட் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு!


உதகை: நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக விவசாயம், சுற்றுலா விளங்குகிறது. விவசாயத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறி சாகுபடியே பிரதானம். மாவட்டத்தில் சுமார்‌ 7000 ஹெக்டேர்‌ பரப்பில்‌ காய்கறி பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கேரட்‌, பீட்ரூட்‌, முட்டைகோஸ்‌, காலி ஃபிளவர்‌, உருளைக் கிழங்கு ஆகியவை உதகை, குன்னூர்‌ மற்றும்‌ கோத்தகிரி வட்டாரங்களிலும்‌, மேரக்காய்‌ மற்றும்‌ பாகற்காய்‌ ஆகியவை கூடலூர்‌ பகுதியிலும்‌ சாகுபடி செய்யப்படுகின்றன.

விவசாயிகள்‌ பயிர்சுழற்சி முறையை மேற்கொள்ளாமல்‌ கேரட்‌, பீட்ரூட்‌ ஆகிய பயிர்களை தொடர்ந்து பயிரிடுவதால் நிலத்தின்‌ மண்வளம்‌ பாதிக்கப்படுகிறது. மேலும்,‌ பூச்சி, நோய்‌ மற்றும்‌ நூற்புழு தாக்குதல்‌ அதிக அளவில்‌ காணப்படுவதால்‌, பயிரின்‌ மகசூலும் படிப்படியாக குறைகிறது. காய்கறி பயிர்களில்‌ வீரிய ரக விதைகளை பயன்படுத்துவதால்‌, உற்பத்தி செலவும்‌ அதிகரிக்கிறது.

இந்நிலையில், சாகுபடி செலவை குறைக்க விவசாயிகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது கேரட் விதைப்பு இயந்திரம்.சிறிய அளவிலான இந்த விதைப்பு இயந்திரத்தை தனிநபர்எளிதாக இயக்கலாம். இயந்திரத்தின் முன்புறம் உள்ள உருளை, விதை விதைக்க குழி ஏற்படுத்த, அதன் பின்னுள்ள பகுதியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள பல அடுக்குகளில் விதைகளைநிரப்பினால், விதைகள் சம அளவில் நிலத்தில் விதைக்கப்படுகின்றன. இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலமாக நேரம் மற்றும் விதை விரயம் குறைவதுடன், செலவும் பாதியாக குறைகிறது.

கேரட் விதைப்பு இயந்திரம்

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேரியிடம் கேட்டபோது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கேரட்‌ பிரதான பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. 4,000 ஹெக்டேர்‌ பரப்பில்‌ உதகை, குன்னூர்‌, கோத்தகிரி வட்டாரங்களில்‌ ஆண்டு முழுவதும்‌ பயிரிடப்பட்டு வருகிறது.பெரும்பாலான விவசாயிகள்‌ கேரட்‌ சாகுபடி செய்ய வீரிய ஒட்டு ரகங்களையே அதிக அளவில்‌ தேர்வு செய்வதால்‌, இதற்கானஉற்பத்தி செலவு அதிக அளவில்‌ உள்ளது.

கேரட்‌ வீரிய ஒட்டு ரக விதைகள்‌ கிலோரூ.30,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சராசரியாக ஆட்களைக் கொண்டு விவசாயிகள் விதைப்பதன் மூலமாக, ஏக்கருக்கு 2 கிலோ முதல்‌ 2.5 கிலோவரை கேரட்‌ விதைகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு பதிலாக கேரட்‌ விதைப்பு இயந்திரத்தை பயன்படுத்துவதன்‌ மூலமாக, ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது.

இதனால்‌ விதைகளுக்கான செலவில்‌ ரூ.30,000 வரை சேமிக்கலாம்‌. மேலும்‌, இயந்திரங்கள்‌ மூலமாக விதைப்பதற்கான மேட்டுபாத்தி அமைத்தல்‌, விதைப்பு செலவு ஏக்கருக்கு ரூ.6,000 மட்டும்‌ போதுமானது. சாதாரண முறையில்‌ விதைப்பதற்குஏக்கருக்கு ரூ.20,000 வரை தேவைப்படுகிறது. இதன்‌மூலமாக ஏக்கருக்கு ரூ.14,000 வரை செலவு மீதமாகிறது.

கேரட்‌ இயந்திரத்தை பயன்படுத்தி விதைப்பதன்‌ மூலமாக சரியான இடைவெளியில்‌ விதைப்பு மேற்கொள்ளப் படுகிறது. இதன்மூலமாக, கூலி செலவுரூ.20,000 வரை மீதமாகிறது. இயந்திர விதைப்பு மூலமாக உற்பத்தி செய்யப்படுவதால், 90 சதவீத ராசி கேரட்‌ கிடைப்பதால்‌கூடுதல்‌ வருமானமாக ரூ.30,000 வரை கிடைக்கும்‌.

சாதாரண முறையில்‌ கேரட்‌ விதைப்பதை காட்டிலும்‌, கேரட்‌ விதைப்பு இயந்திரம்‌ மூலமாக விதைப்பு மேற்கொள்வதால்‌ ரூ.94,000 வரை ஏக்கருக்கு மிச்சப்படுத்தலாம்‌. எனவே,கேரட்‌ பயிரிடும்‌ அனைத்து விவசாயிகளும்‌விதைப்பு இயந்திரங்களை பயன்படுத்திஉற்பத்தி செலவை குறைக்கலாம். விதைப்பு மேற்கொள்வதற்கான செயல்விளக்கம்‌ விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறிய பரப்பில்‌ கேரட்‌ பயிரிடும்‌ விவசாயிகள்‌ இயந்திரங்களை பயன்படுத்துவதில் சிரமம்‌ இருந்தால், சம அளவு விதையுடன்‌ சம அளவு வறுத்த ஓமம்‌ கலந்து விதைக்கலாம். இதன்மூலமாக, சம இடைவெளியில்‌ கேரட்‌ விதைக்கப்படுவதால்‌, கேரட்‌ விதைப்பு செலவு மற்றும் பயிர் களைப்புக்கான செலவு பாதியாக குறைக்கப்படுகிறது.

இந்த எளிய தொழில்நுட்பத்தை சிறு விவசாயிகள்‌ பயன்படுத்தி சாகுபடி செலவைகுறைக்கலாம். விவசாயிகள்‌ தொடர்ந்துவீரிய ஒட்டு ரகங்களையே பயன்படுத்தாமல்‌, உள்ளூர்‌ ரகங்களில் குறைந்த விலையில்‌ விற்கப்படும்‌ மாற்று வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்தால் உற்பத்தி செலவு குறையும்’’ என்றார்.

x