அதிரடி... விதிகளை மீறியதாக 350 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!


மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (மாதிரி படம்)

குறைந்தபட்ச தர விதிகளை மீறியதாக நாட்டில் உள்ள 50 சதவீத மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)

2020-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தர விதிகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் இந்தியாவில் உள்ள 50 சதவீத மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), விளக்கம் கோரி, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக என்எம்சி அதிகாரிகள், என்எம்சி விதிகளைப் பின்பிற்றாததால் நாட்டில் 50 சதவீத மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளன. இந்த புகாரில் நாடு முழுவதும் 349 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவற்றில் 197 அரசு நிதிஉதவி அளிக்கும் கல்லூரிகள். மற்றவை தனியார் கல்லூரிகள். நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள கல்லூரிகள் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஓராண்டு தடைவிதிக்கப்படும்.

கேரளாவின் இடுக்கியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் வருகைப்பதிவில் குறைபாடு, குறைந்தபட்ச தர விதிகளின் படி தேவையான எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லாதது போன்ற குறைபாடுகளுக்காக, அந்த கல்லூரியின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவர்

இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இருப்பிட மூத்த மருத்துவரின் வருகைப்பதிவு குறைபாடு தொடர்பான புகாரில் பல்வேறு கல்லூரிகள் சிக்கியுள்ளன.

குறைந்தபட்ச தர விதிகள் பிரிவு 3.2-ன் படி, மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இருப்பிட மூத்த மருத்துவரின் வருகைப்பதிவு குறைந்தது 75 சதவீதம் இருக்க வேண்டியது கட்டாயம். தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்த விதிகளைப் பின்பற்றாத புகாரில் கடந்த 2 மாதங்களுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 40 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்துள்ளன என்றனர்.

அரசு கொண்டிருக்கும் தகவலின் படி, இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு 387 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது.

x