கொடைக்கானல் கோடை விழா படகுப் போட்டி: ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்


கொடைக்கானல் கோடை விழா படகு போட்டி

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) நடந்த படகுப் போட்டியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கனமழை காரணமாக, மே 21-ம் தேதி நடக்க இருந்த படகுப் போட்டி, இன்று (மே 25) தமிழ்நாடு வளர்ச்சி கழகம் படகு குழாம் சார்பில் நட்சத்திர ஏரியில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மிதிபடகு போட்டியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

போட்டியை கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராம் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சத்தியநாதன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் காயத்ரி, சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன், உதவி அலுவலர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 10-நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நாளையுடன் (மே 26) நிறைவடைகிறது.