கோவில்பட்டி: தருவைகுளம் அருகே பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் பழங்கால கொரியன் நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தருவைகுளம் அருகே பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் அதிக அளவிலான சங்கு ஆபரணங்களின் சிதைவுகள், மண்பாண்ட சிதைவுகள், பீங்கான் சிதைவுகள், பெண் தெய்வம் (லட்சுமி) போன்ற சுடுமணல் பொம்மை, உலோக வார்ப்பு எச்சங்கள், அரவை கல், வித்தியாசமான செங்கற்கள் கட்டுமானம், தொன்மையான வட்டக் கிணறுகள் போன்றவை குறித்து இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பட்டினமருதூர் கடற்கரை பகுதியை தஞ்சை பல்கலைக்கழக மாணவி ஜஸ்வர்யா, தருவைகுளத்தைச் சேர்ந்த மாணவர் மிக்கேல் தினேஷ் ஜோயல், ஒரிசா பாலுவின் இளந்தமிழர் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் ஷர்வேஸ், மகதன்யா ஆகியோர் பார்வையிட வந்தனர். அவர்கள் கடற்கரை பகுதியில் ‘டோலவீரா ஹரப்பா’ நாகரீகத்தை விட தொன்மையான கிணற்றை பார்வையிட்டனர். அங்கு வித்தியாசமாக காணப்பட்ட நாணயம் ஒன்றை கண்டெ டுத்தனர்.
தஞ்சை பல்கலைக் கழக பேராசிரியர்கள் அதனைஆய்வு செய்தபோது, அந்தநாணயம் கொரிய நாட்டு நாணயம் என்பது தெரியவந்தது. இந்த நாணயம் 33 மி.மீ. சுற்றளவும், 2.6 கிராம் எடையுடன் காணப்பட்டது. இதுபோன்ற நாணயம் கி.பி. 998 - 1,097 வரை கொரிய வம்சத்தின் மன்னன் சுக்ஜோங்கின் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட நாணயத்தை போன்று உள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறும் போது, “இந்த நாணயம் ‘கொரிய நாணயம்’ போன்று உள்ளது. இது பண்டைய பாண்டியர்களின் கடல் கடந்த வணிக மற்றும் கலாச்சார உறவுகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.
கொரியர்களால் தெய்வமாக கருதப்படும் ‘சூரிரத்னா’ (Queen Heo Hwang Ok) என்ற பண்டைய இளவரசி ‘அயுத்தா’ என்ற பகுதியில் இருந்து வந்ததாகவும், அவர் வந்த வாகனத்தில் இருந்த கொடியில் இரட்டை மீன் சின்னம் இருந்ததாகவும், அதனால் அவர் தென்னகத்து பாண்டிய தேசத்தை சார்ந்தவராக இருக்கலாம் என்றகருத்து நிலவுகிறது. பட்டினமருதூரை ஆய்வு பகுதியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும்” என்றார்.