உஷார்... இந்தியாவை அச்சுறுத்தும் சீனாவின் போலி பூண்டு!


போலி பூண்டுக்கு எதிராக எச்சரிக்கை

சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் போலிகளின் வரிசையில் தற்போது, இந்தியர்களின் வயிற்றிலடிக்கும் வகையில் போலி பூண்டுகளும் நுழைந்திருப்பது புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

அச்சு அசல் போலவே தோற்றமளிக்கும் சீனாவின் எலெக்ட்ரானிக் உபகரணங்களை அறிந்திருப்போம். சல்லிசான விலையில் கிடைக்கும் சீனத்து ஸ்மார்ட் போன்களும் அவற்றின் பயன்பாடுகளும் இந்தியர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட ஒன்று. எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமல்ல பிளாஸ்டிக் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் சீனாவின் கைங்கர்யம் இருந்தது. இந்த வரிசையில் அண்மையில் இந்தியர்களை அலற வைத்திருக்கிறது சீனாவின் போலிப் பூண்டு.

பூண்டு

சீனாவின் போலி பூண்டுக்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்த பிறகே தாமதமாக இந்தியா கண் விழித்திருக்கிறது. அன்றாட சமையலில் தவிர்க்க முடியாதது மட்டுமன்றி, அதன் மருத்துவ குணங்களுக்காவும் பூண்டு போற்றப்படுகிறது. ஆனால் அதிலும் போலியை புகுத்தியிருக்கிறது சீனா.

உலகளவில் பூண்டினை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கும் சீனா, லாப வெறியில் பூண்டு மகசூலில் பல அபாயகரமான மற்றும் அசூயையூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியது. மனிதக் கழிவுகளை பயன்படுத்தி சீனா பூண்டுகளை சீனா விளைவிப்பதற்கு எதிராக அமெரிக்காவின் செனட்டர்கள் கொதித்தபோதே உலகம் திரும்பிப் பார்த்தது.

அடுத்தபடியாக, பூண்டு போலவே இருக்கும் பூண்டு அல்லாத விளைபொருட்களை கலந்து விற்க ஆரம்பித்தது. பூண்டின் நிறத்துக்காக அவற்றை குளோரின் உள்ளிட்ட கடுமையான வேதிப்பொருட்களால் ப்ளீச் செய்தது. சீனாவிலிருந்து பூண்டு இறக்குமதி செய்யும் நாடுகள் மேற்கொண்ட பரிசோதனையில், சீனப் பூண்டு அதற்கான இயற்கை குணநலன் ஏதும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த போலி பூண்டினை உட்கொள்வதால் உடல் நல அபாயங்கள் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார்கள்.

மேலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டில் அபாயகரமான ரசாயனங்கள் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாயின. பூண்டுக்கான கவர்ச்சியான தோற்றத்தை உருவாக்குவதற்காக, குளோரின் கொண்டு ப்ளீச் செய்யப்படுவது குறித்தும் அபாய சங்கு ஊதியிருக்கிறார்கள். பூண்டுக்கான தனித்துவ மணம் இல்லாததால், அவற்றுக்கான செயற்கை ரசாயனங்களையும் உபயோகிக்கிறார்கள். இதனையடுத்தே கடுமையான தரக் கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வுக்கான அறைகூவல்களை சீன பூண்டுக்கு எதிராக உலக நாடுகள் விடுத்துள்ளன.

சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு

நுகர்வோர் உஷாராக சீனப் பூண்டினை நேரடியாக தவிர்த்தபோதும், பூண்டு மசாலா, பூண்டு விழுது பெயரிலும், உடைத்த பூண்டு விற்பனையிலும் நுகர்வோர் சரிபார்க்க முடியாத வகையில் அவர்களை மறைமுகமாக சீன ஆபத்து சூழ்ந்து வருகிறது. இவற்றுக்கு அப்பால் சீனத்துப் பூண்டின் ஆக்கிரமிப்பால், இந்தியாவின் பூண்டு விவசாயிகள் நட்டமடைந்து வருவதும் தனியாக நடக்கிறது.

நுகர்வோருக்கு அடுத்தபடியாக, உள்ளூர் பூண்டு விளைச்சல் மற்றும் வர்த்தகத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் வயிற்றிலும் அடித்து வருகிறார்கள். அரசாங்கம் விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சீனாவிலிருந்து வரும் போலி பூண்டுக்கு எதிரான நடவடிக்கை முழுமை பெறும்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று டிஸ்சார்ஜ்.. முழுவதும் குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

x