புதுச்சேரியை மீண்டும் மிரட்டும் கொரோனா: உயரும் தொற்று எண்ணிக்கை


புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா (கோப்பு படம்)

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து, கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரித்து வந்த நிலையில், புதிய வகை ஃப்ளூ காய்ச்சல் பரவி வருவது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மீண்டும் சளி மாதிரிகளை சோதனையிடும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல், சுவை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்து வந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 43 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜிப்மர் மருத்துவமனை

அதில் 2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 பேருக்கு மிதமான அறிகுறிகள் மட்டும் தென்பட்டதால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வீட்டை விட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு, சானிட்டைசர்கள் பயன்படுத்தி கைகளில் அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

x