நோயாளிகளை அச்சுறுத்தும் நாய்கள்... கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி!


மருத்துவமனை வளாகத்தில் நாய் நடமாட்டம்

தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தெரு நாய்களின் நடமாட்டத்தினால் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து வாரம் இரு முறையாவது நாய்களை பிடித்து செல்லுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம், மாநகராட்சிக்கு புகார் அனுப்பியுள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் நாய் நடமாட்டம்

தெரு நாய்களை பிடிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களை குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதால் மாநகராட்சியால் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய முடியவில்லை. அதனால், மதுரை மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. சில இடங்களில் கோபக்கார நாய்கள், நோய் தொற்று நாய்கள் குழந்தைகள், பெரியவர்கள், தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தொல்லை செய்கின்றன.

சில நாய்கள் கடித்தும் விடுகின்றன. இதனால், நாய் கடியால் அரசு ராஜாஜி மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு கணக்கின் படி மதுரை மாநகராட்சியில் மட்டுமே 47 ஆயிரம் தெருநாய்கள் இருந்துள்ளன. அதன்பிறகு தெருநாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதனால், தெரு நாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியிருக்க கூடும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குடியிருப்புகளை தாண்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திலும் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனை பிடிக்க வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் மாநகராட்சி நகர்நல அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தினந்தோறும் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகம் மற்றும் வார்டு பகுதிகளிலும் கூட நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மாநகராட்சியின் சார்பில் வந்து நாய்களை அவ்வப்போது பிடித்து செல்கின்றனர். ஆனால், அதே நாய்கள் அடுத்த நாளே இங்கு வந்துவிடுகின்றன. அதனால், நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனவே, நோயாளிகளின் நலன் கருதி வாரம் இரு முறையாவது நாய்களை பிடிக்கும் வண்டியை அனுப்பி நாய்களை பிடிக்க உதவுமாறு வேண்டுகிறேன். பிடிக்கப்படும் நாய்கள் மீண்டும் இங்கு வராத வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

x