136 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை: முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!


முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளதை அடுத்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், வேளாண் ஆதாரமாகவும் இருந்து வரும் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கி வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் 136 அடியை அணையின் நீர்மட்டம் எட்டும் போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.

இதனிடையே கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை

அதேபோல், முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான குமுளி, லோயர் கேம்ப், தேக்கடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம், நண்பகல் 2 மணி நிலவரப்படி, 136 அடிக்கு இன்றைய நிலவரப்படி உயர்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை

இதையொட்டி முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

x