ஏற்காட்டில் செல்லப் பிராணிகள் கண்காட்சி: சாகசம் செய்த நாய்களால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


ஏற்காட்டில் செல்லப் பிராணிகள் கண்காட்சி:

சேலம்: ஏற்காடு கோடை விழாவில் நடைபெற்ற செல்லப் பிராணிகள் கண்காட்சியில், ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டின நாய்களும் கிரேடன் டெலிவர் உள்ளிட்ட அயல்நாட்டு நாய்களும் பங்கேற்று, சாகசங்களை நிகழ்த்தி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்தன.

ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடை விழா மலர் காட்சியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, சுற்றுலாப் பயணிகளுக்கான படகு போட்டி விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. மேலும், தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் எதிர்பார்த்த செல்லப்பிராணிகள் கண்காட்சி ஏற்காடு ஏரி அருகே உள்ள மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில், வளர்ப்பு நாய்கள், குதிரைகள், பறவைகள் உள்ளிட்டவை பங்கேற்றன.

நாய்களுக்கான கண்காட்சியில், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கிரேடன், கோல்டன் ரெட்ரீவர் , டெரியர் உள்பட 13 வகையான நாய் இனங்கள் பங்கேற்றன. இவை, தங்கள் எஜமானர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து சாகசங்களில் ஈடுபட்டன. இந்த செல்லப்பிராணிகளின் சாகச நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தின.

இதேபோல், சேலம் மாநகர காவல் துறை, சேலம் மாவட்ட காவல்துறை, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை ஆகியவற்றின் துப்பறியும் படை பிரிவை சேர்ந்த வெடிகுண்டு, போதைப்பொருள் ஆகியவற்றை கண்டறியும் மோப்ப நாய்களும் இதில் பங்கேற்று பயிற்சியாளரின் கட்டளைக்கு கீழ்படிந்து சாகசங்களை நிகழ்த்திக் காட்டின.

செல்லப் பிராணிகள் கண்காட்சியில் 13 வகையான நாய் இனங்கள் மொத்தம் 64 எண்ணிக்கையில் பங்கேற்றன. ஒவ்வொரு வகையான நாய் இனத்துக்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிராஜ் என்பவரின் கிரேடன் நாய்க்கு ஒட்டுமொத்த சாம்பியன் பரிசு வழங்கப்பட்டது.