கூகுள் மேப் வழிகாட்டுதலால் நீரோடைக்குள் புகுந்த கார் - 4 பயணிகள் பத்திரமாக மீட்பு @ கேரளா


பிரதிநிதித்துவப் படம்

கோட்டயம்: ஹைதராபாத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் குழு ஒன்று, வழிகாட்ட கூகுள் மேப்பினைப் பயன்படுத்திய நிலையில், அவர்களின் கார் நீரோடை ஒன்றுக்குள் இறங்கியது. எனினும், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது. ஒரு பெண் உட்பட நான்கு பேர் கொண்ட குழு ஒன்று ஹைதராபாத்திலிருந்து ஆழப்புலா நோக்கிப் பயணித்து இருக்கிறது. அவர்களின் கார் தெற்கு கேரள மாவட்டமான குருப்பந்தாரா அருகே சென்றபோது, அங்கு தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சாலையோர நீரோடை ஒன்றிலிருந்து நிரம்பி வெளியேறிய தண்ணீர் சாலையைச் சூழ்ந்து ஓடியிருக்கிறது.

புதிய இடம் குறித்த பரிச்சயம் இல்லாததால், காரில் இருந்தவர்கள் தங்களின் பயணத்தை கூகுள் மேப் வழிகாட்டுதலுடன் தொடர்ந்திருக்கின்றனர். அது அவர்களைத் தவறுதலாக நீரோடைக்கு வழிகாட்டி காரை மூழ்கச் செய்துள்ளது.

நல்வாய்ப்பாக அருகில் இருந்த ரோந்து போலீஸ் குழு மற்றும் உள்ளூர்வாசிகளின் தீவிர மீட்பு முயற்சியால் காரில் இருந்த நால்வரும் காயமின்றி தப்பினர். ஆனால், கார் நீரில் மூழ்கி விட்டது. இது குறித்து காடுதுருத்தி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "வாகனத்தை வெளியே எடுக்கும் முயற்சி நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை இல்லை. கடந்த ஆண்டு அக்டோர் மாதம், கூகுள் மேப்பின் வழிகாட்டுதலைப் பின்பற்றி சென்றதால் ஏற்பட்டதாக கூறப்படும் விபத்து ஒன்றில் இரண்டு இளம் மருத்துவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இதுபோன்ற சம்பவங்களைத் தொடர்ந்து பருவமழை காலங்களில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல் எச்சரிக்கைகளை கேரளா போலீஸார் வெளியிட்டுள்ளனர்.