‘மேலே படிக்க அனுமதித்தால் மட்டுமே கல்யாணம்’ தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை தவிர்த்த மணமகள்


தாலியோடு நெருங்கும் மணமகனைத் தவிர்க்கும் மணமகள்

‘மேற்படிப்பே முக்கியம்’ என தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளையையும், திருமணத்தையும் தவிர்த்திருக்கிறார் கர்நாடகத்தை சேர்ந்த மணமகள் ஒருவர்.

திருமண பந்தத்துக்குள் கால் வைத்ததுமே, பெண்ணின் கனவுகள், லட்சியங்கள், விருப்பங்கள் அனைத்தும் புதை மணல் போல இழுத்துக்கொள்ளும். பெரும் போராட்டங்களுக்கு இடையேத்தான், இங்கே பெண்கள் தாங்கள் விரும்பிய படிப்பையும், பணியையும் தொடர முடிகிறது. இதற்கு உதாரணமான கர்நாடக மாநிலத்து சம்பவம் இணையத்தை கலக்கி வருகிறது.

திருமணம்

சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் - ஐஸ்வர்யா இடையே திருமணம் மேற்கொள்ள இருவீட்டுப் பெரியவர்களால் 6 மாதங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த மாதம் இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்து, மணநாளாக டிச/7 என குறிக்கப்பட்டது. மண்டபம் பார்த்து, பத்திரிக்கை அடித்து, உறவினர்களை அழைத்து வெகு விமரிசையாக திருமணத்துக்கான ஏற்பாடுகள் திரண்டன. ஆனால் தாலிகட்டும் நேரத்தில் எதிர்பார சம்பவம் நிகழ்ந்தது.

மணமகன் மஞ்சுநாத் தாலி கட்ட முன்வரும்போது, மணமகள் ஐஸ்வர்யா அதனை தடுத்தார். மணமகள் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் ஐஸ்வர்யா மசியவில்லை. இதனால் தாலியும் கையுமாக பரிதாபமாக நின்ற மஞ்சுநாத்தை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். போலீஸார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மணமகளின் விருப்பத்துக்கு மாறான அந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

மேலும் மணமகன் வீட்டாருக்கான கல்யாண செலவுகள் அனைத்துக்கும் பொறுப்பேற்பதாக மணமகள் வீட்டார் ஒப்புக்கொண்டனர். தாலி கட்டும் கடைசி நேரத்தில் மணமகள் ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்ததன் பின்னணியில், ஐஸ்வர்யாவின் உயர்கல்வி விருப்பத்துக்கு மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் உடன்படாததன் மர்மம் ஒளிந்திருந்தது.

ஆரம்ப பேச்சுவார்த்தையின் போது, ஐஸ்வர்யாவின் மேற்படிப்பு ஆசைக்கு தடைபோடாத மாப்பிள்ளை வீட்டார், கல்யாண நெருக்கத்தில் ஐஸ்வர்யா கல்லூரி செல்வதற்கு எதிராக முடிவெடுத்தார்களாம். தாலிகட்டும் கடைசி நேரம் வரை மாப்பிள்ளையின் பதிலை எதிர்பார்த்திருந்த ஐஸ்வர்யா, சாதக பதில் கிடைக்காததில் தாலியையும் அதன் வாயிலான திருமண பந்தத்தையும் விலக்கி இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோவும், பெண்கள் உயர்கல்வி பெறுவதில் நீடிக்கும் சவால்கள் குறித்தும் இணையத்தில் விவாதங்கள களைகட்டி வருகின்றன. இதனிடையே ஐஸ்வர்யாவின் திடமான முடிவை கொச்சைப்படுத்தும் வகையிலும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனபோதும் தனது எதிர்காலம் மற்றும் உயர்கல்வி விருப்பத்தில் திடமாக நின்ற ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

x