கொரோனா தடுப்பூசியால் இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு? - மத்திய சுகாதார அமைச்சர் விளக்கம்!


கோவிட் தடுப்பூசி இளைஞர்களிடையே விவரிக்க முடியாத திடீர் மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மன்சுக் மாண்டவியா அளித்த எழுத்துபூர்வ பதில்: ''கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்கள் சிலருக்கு திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டதன் காரணமாகத்தான் அவர்கள் உயிரிழந்தார்கள் என்பதற்கு போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்த அச்சம் தொடர்பான உண்மைகளை அறிய ICMR-இன் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE) கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை 4 மாத கால ஆய்வை நடத்தியது.

மாரடைப்பு மரணங்கள் - கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 18 வயது முதல் 45 வயது வரையிலான மரணமடைந்தவர்களின் மருத்துவ அறிக்கைகள் ஆராயப்பட்டன. அவர்களின் வயது, பாலினம், குடும்ப சுகாதார வரலாறு, புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்பாடு, மது அருந்துதல், தீவிரமான உடல் செயல்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 729 பேரின் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்ததில், கோவிட் தொற்றுக்கு முந்தைய இளம் வயதினரின் மரணங்களோடு ஒப்பிடுகையில் கோவிட் தடுப்பூசிக்குப் பிறகான காலகட்டத்தில் இளம் வயதினரின் திடீர் மரணங்கள் குறைந்துள்ளன.

அதோடு, கோவிட் தொற்றுக்குப் பிறகான இளம் வயதினரின் மரணங்கள், அவர்களின் குடும்ப வரலாறு, அதிகமாக மது குடிப்பது, போதைப் பொருட்கள் பயன்பாடு, இறப்பிற்கு 48 மணி நேரத்திற்கு முன் தீவிர உடல் உழைப்பு ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளது. எனவே, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இளைஞர்களிடையே விவரிக்க முடியாத திடீர் மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கவில்லை என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது'' என்று மன்சுக் மாண்டவியா பதில் அளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி! இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விஜய் பட வில்லன்!

x