ஒரே நாளில் 10 குழந்தைகள் பலி... அரசு மருத்துவமனையின் அலட்சிய மருத்துவர்களுக்கு எதிராகப் பொங்கும் மேற்கு வங்கம்


மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகளில், 24 மணி நேரத்தில் 10 குழந்தைகள் பலியாகி இருப்பது மேற்கு வங்கம் மாநிலத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 24 மணி நேரத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சோக சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜாங்கிபூரில் உள்ள புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் சரியான வசதிகள் இல்லாததை காரணமாக்கி அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள், புதிதாய் பிறந்த சிசுக்கள் உள்ளிட்டோர், முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு திடீரென மாற்றப்பட்டனர். ஆனால் முர்ஷிதாபாத்த்தில் சிகிச்சை பலனிறி 1 குழந்தை மற்றும் 9 சிசுக்கள் பலியாகி உள்ளனர்.

"கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் இறந்துவிட்டன. நாங்கள் விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் எடைக்குறைவுடன் இருந்ததே அவர்களின் இறப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டது. ஒரு குழந்தைக்கு கடுமையான இதய பிரச்சனையும் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கும் வசதி எங்களிடம் இல்லை" என்று முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அமித் டான் விளக்கமளித்துள்ளார்.

அதிர்ச்சியூட்டும் முர்ஷிதாபாத் அலட்சிய மருத்துவர்களின் சமாளிப்புக்கு அப்பால், ஜாங்கிபூர் மருத்துவமனையில் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது. பொதுப்பணித்துறையினரின் பணிகள் நடந்து வருவதை காரணமாக்கியே அங்குள்ள அனைத்து குழந்தைகளும் தடாலடியாய் முர்ஷிதாபாத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவர்கள் சாதிக்கிறார்கள்.

முர்ஷிதாபாத் மருத்துவமனை ஏற்கனவே 300 நோயாளிகளுக்கு 129 படுக்கைகளுடன் தடுமாறி வருகிறது. இதனால் அங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு மருத்துவர்களின் அரவணைப்பு கிடைக்காததில் அவர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். இதனையடுத்து மூத்த மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

’இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று மாநில சுகாதாரத்துறையும் உறுதியளித்துள்ளது. ஆனால் இவையெல்லாம் கண்துடைப்பு நடவடிக்கைகள் என்று குற்றம்சாட்டும் பொதுமக்கள், அலட்சிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x