கேஜ்ரிவால் நாற்காலியில் அமரப்போகும் அதிஷி... தலைநகரை ஆளப்போகும் தலைவியின் பின்னணி


அதிஷி உடன் அரவிந்த் கேஜ்ரிவால்

கேஜ்ரிவால் சிறையில் முடங்க உள்ள நிலையில் அவரது அரசியல் வாரிசாக ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்துவதற்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார் அமைச்சர் அதிஷி.

மார்ச் 21 அன்று அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்து, அவரது ஆம் ஆத்மி கட்சியின் வரலாற்றில் இதுவரையில்லாத பெரும் நெருக்கடி எழுந்துள்ளது. தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் கேஜ்ரிவால் அடுத்த சில தினங்களில் நீதிமன்ற காவலுக்கு செல்ல இருக்கிறார். அவர் சிறையில் முடங்கும்போது, கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்தபோவது யார் என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.

சுனிதா கேஜ்ரிவால்

கேஜ்ரிவால் கைது என்றதுமே அவரது இடத்தை நிரப்புவதில் 2 பெண்களின் பெயர்கள் பெரிதும் அடிபட்டன. முதலாமவர் கேஜ்ரிவால் மனைவியான சுனிதா கேஜ்ரிவால். இரண்டாமவர் டெல்லி நிதியமைச்சர் அதிஷி. வடமாநிலங்கள் நெடுக பறந்து சென்று மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வது, பாஜகவுக்கு எதிரான கடுமையான தாக்குதலை தொடர்வது என, ஆம் ஆத்மி கட்சிக்கான தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில், இந்த இருவரில் அதிஷியே முன்னிலை பெறுகிறார்.

கட்சியின் நம்பர் 2-வாக இருந்த துணை முதல்வர் மணீஷ் சிஷோடியா ஏற்கனவே சிறையில் முடங்கியிருக்கிறார். கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் கேஜ்ரிவாலால் மறைமுகமாக அடையாளம் காட்டப்பட்டவர் நிதியமைச்சர் அதிஷி. கேஜ்ரிவால் அரசியல் உயரத்துக்கு இணையானவர் அல்ல என்றபோதும், பாஜகவை எதிர்ப்பதில் கேஜ்ரிவாலுக்கு சளைக்காது களமாடக் கூடியவர்.

தற்போது 43 வயதாகும் அதிஷி, ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களில் படிப்புகளை முடித்த அரிதான இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக அரசியலைத் தொடங்கிய அதிஷி, படிப்படியாக கட்சியின் நிர்வாக மட்டங்களில் உயர்ந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லியில் போட்டியிட்டவர், பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் தோல்வியுற்றார்.

2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கல்காஜி தொகுதியில் நின்று வென்றவருக்கு, கட்சியில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன. கட்சியின் கோவா பிரிவின் பொறுப்பாளராக அதிஷி நியமிக்கப்பட்டபோது, கேஜ்ரிவாலின் தளபதியாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். அதன் பின்னர் அவருக்கான அரசியல் முக்கியத்துவம் வெளிப்படையானது.

அதிஷி

டெல்லி அரசாங்கத்தில் கல்வி, நிதி, பொதுப்பணித்துறை, வருவாய் மற்றும் சேவைகள் போன்ற பலதரப்பட்ட இலாகாக்கள் அவர் வசம் சேர்ந்திருந்தன. கட்சியின் கொள்கைகளை வகுப்பது முதல் பாஜகவை எதிர்ப்பது வரை பரவலாக கேஜ்ரிவாலுக்கு இணையாக ஆம் ஆத்மியில் பார்க்கப்படுகிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி அமைச்சரவையின் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, அதிஷிக்கு குறிப்பிடத்தக்க 12 துறைகள் ஒதுக்கப்பட்டன. இது ஆம் ஆத்மி கட்சிக்குள் இருக்கும் எந்த அமைச்சருக்கும் கிடைக்காதது. இந்த குறிப்பிடத்தக்க ஒதுக்கீடு அவரை கேஜ்ரிவால் அமைச்சரவையில் இரண்டாவது-தலைவராக நிலைநிறுத்துகிறது. கட்சி மற்றும் அரசாங்கத்திற்குள் அவரது செல்வாக்கு மற்றும் பொறுப்புகள் அதிகரித்து வருவதையும் எடுத்துக்காட்டியது.

இவற்றின் அடுத்த கட்டமாக அடுத்த சில தினங்களில், கேஜ்ரிவால் நாற்காலியில் அதிஷி ஆக்கிரமிக்கப் போகிறார். இவை ஆம் ஆத்மி கட்சியிலும், ஆட்சியிலும்; எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் பணிகளிலும், கேஜ்ரிவால் இடத்தை பூர்த்தி செய்யுமா என்பதை அறிந்துகொள்ள அக்கட்சியினர் மட்டுமன்றி பாஜகவினரும் தவிப்போடு காத்திருக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x