புனேவில் மோசமான வானிலை... விமான சேவை பாதிப்பு; பயணிகள் கடும் அவதி


மோசமான வானிலை

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் வானிலை தெளிவாக தெரியாததால் இரு விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. மேலும் பல விமானங்களின் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புனே விமான நிலையம்

டெல்லியில் இருந்து இன்று காலை 8 மணிக்கு புனே வரவிருந்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. இதேபோல், டெல்லியில் இருந்து புனே வரவிருந்த விஸ்தாரா விமானமும் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது.

புனே நகரில் இன்று காலை 50 மீட்டர் தொலைவுக்கு எதுவுமே தெரியாத நிலையில் வானிலை மோசமாக காணப்பட்டது. இதன் காரணமாக விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 5 விமானங்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், வணிக தொடர்பாக விமான பயணம் மேற்கொண்ட பலர் உரிய நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வானிலை தாக்கம் காரணமாக புனேவிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய 8 விமானங்களின் புறப்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை பாதிப்பு

விமானம் தாமதம் மற்றும் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்ட சூழல் காரணமாக விமான பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். புனேவிலிருந்து டெல்லி செல்ல தயாராக இருந்த விமானம், வானிலை தெளிவாக தெரியாததால் ஒரு மணி நேரமாக புறப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக விமானத்தில் அமர்ந்த பயணிகள் தங்களுடன் குழந்தைகள் உள்ளதாகவும், உணவு நேரம் கடந்தும் தங்களுக்கு தேநீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். விமான சேவை பாதிப்பால் பல்வேறு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x