திருவாரூரில் தொடர் மழையால் 1,000 ஏக்கர் கோடை நெற்பயிர்கள் பாதிப்பு


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வரம்பியத்தில் மழையில் சேதமடைந்த கோடை நெற்பயிர்கள்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால், 1,000 ஏக்கரில் கோடை சாகுபடி செய்த அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டு 20,000 ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை செலவு செய்து, தற்போது பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்யும் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன.

குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, வரம்பியம், நீடாமங்கலம், பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து முளைவிடத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் உள்ளிக்கோட்டை கோவிந்தராஜ், திருவாரூர் சின்ராஜ் ஆகியோர் கூறியதாவது: கடந்த 10 நாட்கள் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன. இதனால், அறுவடை பணி தள்ளி போய்விட்டது. பல வயல்களில் நெல்மணிகள் சாய்ந்து மீண்டும் முளைவிடத் தொடங்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் பரவலாக 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது வேளாண்மைத் துறை அந்தந்த வட்டார அதிகாரிகளை பயன்படுத்தி, பாதித்த நெல் வயல்கள் குறித்த கணக்கெடுப்பை செய்ய முன்வந்திருப்பது ஆறுதலாக உள்ளது. இந்த குழுவின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.