ஜில்னு இருக்குது... கொட்டுது கும்பக்கரை அருவி... வாங்க குளிக்கலாம்!


கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதால் ஐந்து நாட்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதியளித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வட்டக்காணல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் கடந்த 2-ம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே, அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்து சீரானது.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையை வனத்துறை நீக்கியுள்ளது. ஐந்து நாட்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதித்தனர் இதனைத் தொடர்ந்து கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.

x