சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் மேகமலை வன கிராமம் அமைந்துள்ளது. இந்த மலைச்சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தேயிலை தோட்டங்கள், மூடுபனி மற்றும் சில்லென்ற காலநிலைக்கு மேகமலை பெயர் பெற்றது.
வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் முக்கிய நாட்களில் மட்டுமே இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். பண்டிகை விடுமுறைகள் காரணமாக கடந்த சில வாரங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இங்கு மகாராஜா மெட்டு அருகே உள்ள 'வியூ பாய்ன்ட்' பகுதிக்குச் சென்று பள்ளத்தாக்கு பகுதிகளை பலரும் கண்டு ரசித்து வருகின்றனர்.
இது குறித்து 'இந்து தமிழ் திசை' உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராபர்ட் கூறியதாவது: மேகமலையில் உள்ள வியூ பாய்ன்ட் பகுதிக்குச் செல்ல வனத்துறையினரால் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மலை உச்சிக்குச் செல்லும் வழியில் டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மலை முகட்டுப் பகுதியில் வனத்துறையினரின் கண்காணிப்பு எதுவும் இல்லை.
இதனால் பலரும் வியூ பாய்ன்டின் விளிம்பு வரை சென்று ரசிக்கின்றனர். சிலர் சரிவான பகுதியில் இறங்கி புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. எனவே கயிறு அல்லது தடுப்புகளை அமைப்பதுடன், கண்காணிப்புப் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது, விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.