சாக்லேட் பிரியர்களுக்கு கசப்பான சேதி... இந்தியாவில் சாக்லேட் விலை வெகுவாய் உயரும் அபாயம்


சாக்லேட்

சாக்லேட் தயாரிப்பின் மூலப்பொருளான கோகோ பீன் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 200 சதவீதம் உயர்வு கண்டிருப்பதால், சாக்லேட் விலையை அதனை தயாரிப்பு நிறுவனங்கள் விரைவில் உயர்த்த இருக்கின்றன.

சாக்லேட் என்பது குழந்தைகள் ரசிக்கும் இனிப்பு ரகம் மட்டுமல்ல. ’ஸ்வீட் எடு.. கொண்டாடு’ என அனைத்து வயதினரும் மத்தியிலும் மகிழ்வான தருணங்களை கொண்டாடுவதற்கான உபாயமாக சாக்லேட் உள்ளது. டார்க் சாக்லேட்டின் நன்மை காரணமாக உடல் ஆரோக்கியத்துக்கும் வெகுவாய் அது பரிந்துரை செய்யப்படுகிறது. ஐஸ்க்ரீம் உள்ளிட்ட இதர ரசனையான ரகங்களுக்கும் சாக்லேட் தவிர்க்க முடியாதது.

மில்க் சாக்லேட் - டார்க் சாக்லேட்

இந்த நிலையில் சாக்லேட் பிரியர்களுக்கு அதன் விலை உயர்வு கசப்பான அனுபவத்தை தர காத்திருக்கிறது. உலக சந்தையில் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் கோகோ பீன் விலை ஒரு கிலோ ரூ.650 என்றளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.200 முதல் 220 வரை இருந்த விலையைவிட, உள்ளூர் விலைகள் தற்போது 200 சதவீதம் உயர்ந்துள்ளன.

உலகளாவிய கோகோ ஃபியூச்சர்ஸ் விலையும் ஒரு டன்னுக்கு சுமார் 7,000 அமெரிக்க டாலர் என்றளவில் உள்ளது, இது ஒரே வருடத்தில் சுமார் 150 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. உலகளவில் கோகோ உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் ஐவரி கோஸ்ட் மற்றும் கானாவில், மோசமான வானிலை மற்றும் பூச்சித் தாக்குதல் காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.இந்த நிலைமை தொடர்ந்தால், ஒரு டன்னுக்கு 10,000 டாலர் என்றளவுக்கு விலை எகிறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இதுபோன்ற இக்கட்டுகளில் இந்திய சாக்லேட் நிறுவனங்கள் உற்பத்தியை குறைப்பது, இரண்டாம் ரக சாக்லேட்டுகளை சந்தையில் முன்னிறுத்துவது ஆகியவற்றின் மூலம் நிலைமையை சமாளிக்க முயலும். ஆனால் தற்போதைய சூழல் விலை உயர்வை நோக்கி அவர்களை நெட்டித்தள்ளி வருகிறது. பிரீமியம் டார்க் சாக்லேட்டுகள் முதல் கட்டமாக விலையை உயர்த்தும்.

கானா நாட்டின் கோகோ விளைச்சல்

வளர்ந்து வரும் சாக்லேட் நுகர்வு காரணமாக, கேரளா போன்ற மாநிலங்களின் பங்களிப்பிலான சுமார் 30,000 டன் உள்நாட்டு கோகோ உற்பத்தி என்பது இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. உள்நாட்டின் கோகோ தேவை என்பது தற்போது 1.5 லட்சம் டன்களைத் தொட்டுள்ளது. எனவே சாக்லேட் ரகங்கள் மட்டுமன்றி கோகோ பவுடர் கொண்டு தயாரிக்கப்படும் இதர பொருட்களும் விலை உயர்வை சந்திக்க உள்ளன.

x