அமெரிக்காவில் யூத இனத்தைச் சேர்ந்த மனைவிகள், மதத்தின் பிற்போக்கான விவாகரத்து சட்டத்தை கண்டிக்கும் வகையில், தங்கள் கணவருடன் உறங்க மறுத்து பாலியல் ஒத்துழையாமை போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மதங்கள் எதுவானாலும் அதன் பிற்போக்குத்தனம் என்பது பெண்களை மையமிட்டே செயல்படுகிறது. பெண்களின் உரிமைகள், சுதந்திரம், இருப்பு ஆகியவற்றை பாதிக்கும் இந்த பிற்போக்கு மத கட்டுப்பாடுகளுக்கு எதிராக உலகம் முழுமைக்குமே பெண்கள் போராடி வருகின்றனர்.
இவற்றின் மத்தியில் அமெரிக்கா வாழ் யூத பெண்கள், தங்கள் கணவருடனான பாலியல் உறவைத் துண்டிக்கும் செக்ஸ் ஸ்டிரைக் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதன் மூலம், தங்கள் கணவருடன் இனி உறங்குவதில்லை என சமூக ஊடகங்களில் கூடி யூதப் பெண்கள் பிரகடனம் செய்து வருகின்றனர்.
யூத மனைவிகள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்துக்கு, சமூகத்தின் பல்வேறு அடுக்குகள், பிரிவுகள், மதங்களைச் சேர்ந்த மனைவியர் மத்தியிலும் ஆதரவு அதிகரித்து வருகிறது. யூத மனைவியருக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்களும் பாலியல் ஒத்துழையாமை போராட்டத்தில் குதிக்கும் வாய்ப்பிருப்பதால் அமெரிக்க கணவர்கள் அரண்டு போயுள்ளனர்.
நியூயார்க்கில் சுமார் 800 யூத பெண்கள் முதலில் இந்த போராட்டத்தை அறிவித்தனர். நூற்றாண்டுகள் பழமையான யூத சட்டத்துக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். யூத மனைவியர் விவாகரத்து பெறுவதை கடினமாக்கும் பிற்போக்கு சட்டத்துக்கு எதிராக அவர்கள் விநோதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
யூத திருமண வாழ்க்கையில் கசந்துபோன மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் திருமண உறவுகளை முறித்துக்கொள்ள மனைவிகளுக்கு உரிமை கிடையாது. விவாகரத்து அவசியமெனில் அவர்கள் தங்கள் கணவர்களிடம் எழுத்துபூர்வ அனுமதி பெற வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மனைவியரை மேலும் துன்புறுத்தவும் அந்த கணவர்களுக்கு இது வாய்ப்பளிக்கிறது.
29 வயதாகும் மால்கி பெர்கோவிட்ஸ் என்ற பெண் குடும்ப வன்முறை காரணமாக 2020 முதல் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறார். மனைவியை பழிவாங்கும் நோக்கில் மால்கியின் கணவர் விவாகரத்துக்கு அனுமதிக்க மறுத்து வருகிறார். அவருக்கு ஆதரவாக யூத மதத்தின் பிற்போக்கு சட்டம் இருக்கிறது. மால்கியின் துயரம் பொதுவெளியை எட்டியதில், சக யூத பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். தத்தம் கணவருடன் பாலியல் ரீதியாக உடன்பட மறுக்கும் விநோத போராட்டத்தையும் கையில் எடுத்தனர்.
ஈரானின் ஹிஜாப்புக்கு எதிராக மாஷா அமினியை முன்னிறுத்தி தொடங்கிய போராட்டத்துக்கு இணையாக, விவாகரத்து பெற மனைவிக்கு அதிகாரம் கோரும் யூத மனைவியரின் இந்த போராட்டத்துக்கு பல தரப்பிலும் ஆதரவு அதிகரித்து வருகிறது.