இறப்பு இல்லா பிரசவம் - விருதுநகர் மாவட்டம் சாதனை!


விருதுநகர்: கடந்த ஓராண்டில் நடைபெற்ற 7,998 பிரசவங்களில், இறப்பு இல்லா பிரசவம் என்ற இலக்கை விருதுநகர் மாவட்டம் அடைந்து சாதனை படைத்துள்ளது. விருதுநகரில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 10 அரசு மருத்துவமனைகள், 58 நகர, கிராமப்புற சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு சராசரியாக 8 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன.

2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை மாவட்டத்தில் 8,620 பிரசவங்கள் நடைபெற்றன. இந்த கால கட்டத்தில் பிரசவத்தின்போது 6 இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2023-2024-ம் ஆண்டில் 7,998 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில், எந்த இறப்பு நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

இச்சாதனை குறித்து மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி கூறியதாவது: உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரும்புச் சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும். இவை தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், உணவு பழக்கம் பற்றியும் எடுத்துரைக்கிறோம். சிகிச்சைக்கு வரும் பெண்கள் சுகாதார நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிச் செல்ல இலவச வாகன வசதி, சத்து குறைபாடு, இரும்புச் சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ‘இரும்பு பெண்மணி’ திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்து பெட்டகம் வழங்குகிறோம்.

‘விருகேர்’ என்ற ஆப் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் கர்ப்பிணிகளை கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற தொடர் செயல்பாடுகளால் இந்த ஆண்டு இறப்பு இல்லா பிரசவம் என்ற இலக்கை விருதுநகர் மாவட்டம் அடைந்துள்ளது. 2023-2024-ம் ஆண்டில் மொத்தம் நடந்துள்ள 7,998 பிரசவங்களில் 5,887 பிரசவங்கள் அதாவது 73.6 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.

x