குட் நியூஸ்... புற்றுநோய்க்கு புதிய ஊசி; சிகிச்சைக்கு இனி 7 நிமிடம் ஒதுக்கினால் போதும்!


நுரையீரல் புற்று

புற்றுநோய் சிகிச்சையில் புதிய அத்தியாயமாக, சிகிச்சைக்கான அவகாசத்தை பெருமளவில் குறைக்கும் புதிய ஊசியினை இங்கிலாந்து கண்டறிந்துள்ளது.

தோலின் அடியில் செலுத்தக்கூடிய இந்த ஊசி மூலம், புற்றுநோய் சிகிச்சையில் நோயாளி மற்றும் மருத்துவம் அளிப்போர் என இருதரப்பிலான நேரத்தையும் வெகுவாய் இதன் மூலம் குறைக்க முடியும். இதனால் சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரமும் குறைவதோடு, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

வழக்கமான புற்றுநோய் சிகிச்சையில், உரிய இரத்த நாளங்களை கண்டறிந்து அதன் வாயிலாக டிரிப் மூலமாக மருந்தினை செலுத்தும் முறை பயன்பாட்டில் உள்ளது. இதில் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நேர விரயமாகும். நோயாளியிடம் உரிய ரத்த நாளத்தை கண்டறிய முடியாது போகும் போது இந்த நேரம் மேலும் அதிகமாகும்.

இங்கிலாந்து கண்டறிந்துள்ள Atezolizumab மருந்து

மாறாக இங்கிலாந்து தற்போது கண்டறிந்து இருக்கும் ஊசியை சடுதியில் செலுத்திக் கொள்ளலாம். மருத்துவ நடைமுறைகளுக்காக அதிகபட்சமாக 7 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். Atezolizumab என்ற பெயரிலான இந்த ஊசியானது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டி, புற்று பாதித்த செல்களை அழிக்கச் செய்யும். நுரையீரல், மார்பகம், கல்லீரல் மற்றும் கணைய புற்றுக்கு ஆளானவர்கள் மத்தியில், இந்த ஊசி மருந்து வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

x