இறந்த உடலை பைபர் கிளாஸ் மூலம் பாதுகாக்கும் தொழில்நுட்பம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி கண்டுபிடிப்பு


தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பைபர் கிளாஸ் எம்பெட்டிங் என்ற புதிய தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள உடல்கள்.

ஆண்டிபட்டி: இறந்த உடலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக பைபர் கிளாஸ் எம்பெட்டிங் எனும் முறையில் பாதுகாத்து வைக்கும் தொழில்நுட்பத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி கண்டுபிடித்துள்ளது.

தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கடந்த 2004-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக 1,600 பேரும், வெளி நோயாளிகளாக தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் மற்றும் வெளி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

நுட்பமான ஆபரேஷன், மருத்துவ உயர் தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மருத்துவக் கல்லூரி நிகழ்த்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக உடல் பாகங்கள் மற்றும் முழு உடலை பைபர் கிளாஸ் எம்பெட்டிங் முறையில் பாதுகாக்கும் தொழில் நுட்பத்தை தற்போது கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் பாலசங்கர் கூறியதாவது: இறந்த உடலை பாதுகாப்பதற்காக பைபர் கிளாஸ் எம்பெட்டிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளோம். இதற்காக பிசின் என்ற ரசாயன பொருள் பிளாஸ்டினேசன் செய்யப்பட்ட உடல் மீது உயர் வெப்பத்தில் ஊற்றப்படும். மிகவும் குறைவான வெப்பம் (20 டிகிரி சென்டி கிரேட்) உள்ள அறையில் 24 மணி நேரம் வைத்து, பின் உலர வைக்கப்படும். இம்முறையில் பாதுகாக்கப்படும் உறுப்புகள் மற்றும் உடல்களை எளிதில் அழிக்க முடியாது.

வருட கணக்கில் பாதுகாப்பாக வைக்கலாம். மேலும் இம்முறை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. பக்க விளைவுகள் அற்றது. குறைபாடு உள்ள சிசுக்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வேண்டாத மனித உறுப்புகள், குறுக்கு வெட்டு மாதிரிகள் போன்றவற்றையும் இம்முறையில் பாதுகாத்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தலாம். இந்த கண்டுபிடிப்புக்காக காப்பு உரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம் என்றார். உடற்கூறியல் துறையில் துறை தலைவர் மருத்துவர் எழிலரசன் உட்பட பலர் உடனிருந்தனர்.