பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்; இன்று இறுதிப்போட்டி... பலம்வாய்ந்த டெல்லியை வீழ்த்துமா பெங்களூரு?


மகளிர் பிரீமியர் லீக் டெல்லி பெங்களூரு அணிகள்

மகளிர் பிரீமியர் லீக் டி.20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளன.

இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 5 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளிகள்) 4-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (4 புள்ளிகள்) கடைசி இடமும் பிடித்து வெளியேறின. அதனைத் தொடர்ந்து நடப்பு சாம்பியனான மும்பை அணியை எலிமினேட்டரில் பெங்களூர் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மகளிர் பிரீமியர் லீக்

புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணிக்கும், பெங்களூரு அணிக்கும் இடையே டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்கவுள்ளது.

கடந்த முறை பைனலில் மும்பையிடம் தோற்ற டெல்லி இன்று பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டன் மெக்லானிங் 308 ரன்கள், ஷபாலி வர்மா 265 ரன்கள், ஜெமிமா 235 ரன்கள் விளாசி பார்மில் உள்ளனர். பவுலிங்கில் மரிஜானா காப், ஜெஸ் ஜோசசென் 11, ராதாயாதவ் 10 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.

டெல்லி பெங்களூரு மகளிர் அணிகள்

பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 269 ரன்கள், ரிச்சா கோஷ் 240 ரன் எடுத்துள்ளனர். எலிஸ் பெர்ரி 312 ரன் மற்றும் 7 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதுவரை இரு அணிகளும் 4 முறை மோதி உள்ளது. இதில் ஒன்றில் கூட பெங்களூரு வென்றது கிடையாது. 4 போட்டியிலும் டெல்லி தான் வென்றுள்ளது.

கடந்த ஆண்டு முதன்முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்ட நிலையில் அத்தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இரண்டாம் சீசனை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசு வழங்கப்படவுள்ளது.

x