தொடர் மழை; நீரில் மூழ்கிய 5 ஆயிரம் வாழைகள்- விவசாயி கண்ணீர்


மழை வெள்ளத்தில் மூழ்கிய 5 ஆயிரம் வாழைகள்

மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி பகுதியில் பெய்த கன மழையால் 5,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயி கவலையில் ஆழ்ந்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலப்பட்டி, வேடர்காலனி, ஊமப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் பாலப்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. குறிப்பாக பாலப்பட்டி கிராமத்தில் சுப்பையன் என்ற விவசாயி தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை சாகுபடி செய்திருந்த நிலையில் கனமழை காரணமாக இந்த வாழை மரங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதமாகின.

பவானி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

தண்ணீர் படிப்படியாக வடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை நின்று ஒரு வாரம் ஆகியும் இதுவரை தண்ணீர் வடியாததால் 5 ஆயிரம் வாழை மரங்களும் அழுகத் துவங்கியுள்ளது. இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி கண்ணீர் மல்க கூறினார். மேலும் குடியிருந்த வீட்டினையும் சூழ்ந்த மழை நீரால் அந்த விவசாயி அங்கு இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு தர விவசாயி கோரிக்கை

மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட வாழை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மழை மேலும் தொடரும் வாய்ப்புள்ளதால், தண்ணீரை வெளியேற்ற உதவிட வேண்டும் எனவும் வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

x