வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய ஆட்டோ ஓட்டுநர் திண்டுக்கல்லில் ருசிகரம்!


வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு

திண்டுக்கல்லை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் வளர்த்து வரும் நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

திண்டுக்கல் பெங்காலி மார்க்கெட்டில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளவர் கொட்டாம்பட்டியை சேர்ந்த ஜோதி. இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக லிப்பிகா என்ற பெண் நாயினை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இந்த வளர்ப்பு நாய் தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ளது.

அந்த வளர்ப்பு நாயின் மீது ஜோதியும் அவரது குடும்பத்தினரும் கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாடாக அதற்கு வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து தனது வீட்டினை அலங்கரித்து, உறவினர்களை வரவழைத்து பெண்ணுக்கு நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியினை போன்றே அனைத்து சடங்குகளுடன் தனது செல்ல நாய்க்கு வளைகாப்பினை நடத்தினார்.

இதையொட்டி ஏழு வகையான சாதங்கள், பழம், காய்கறிகள், இனிப்பு வகைகள் என பலவகை சீர்களுடன் வண்ணவண்ண வளையல்களை ஜோதியின் மனைவியும், விழாவிற்கு வந்திருந்த உறவினர்களும் வளர்ப்பு நாய் லிபிகாவுக்கு அணிவித்து மகிழ்ந்தனர். திண்டுக்கல்லில் நடந்த இந்த விநோத வளைகாப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

x