பணியில் திணறும் ஊழியர்கள் நீக்கம்... அதிரடி காட்டும் ஏர் இந்தியா நிறுவனம்


ஏர் இந்தியா விமானம்

பணியில் சுணக்கம் காட்டிய மற்றும் திறமையை வளர்த்துக்கொள்ளாத ஊழியர்களில் சுமார் 180 பேர், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்தியதை அடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதற்கேற்ப அறிவிப்புகளும், பணி நியமனங்களும் நடைபெற்றன. ஆனால் எதிர்பாராவிதமாக ஏர் இந்தியாவில் இருந்து ஊழியர் பணி நீக்கம் குறித்தான செய்தியும் வெளியாகி இருக்கிறது.

ஏர் இந்தியா - பணியாளர்கள்

ஏர் இந்தியா விற்பனைக்கு வந்தபோது, சுதந்திரத்துக்கு முன்பே இந்தியாவில் விமானப் போக்குரவத்தினை தொடங்கிய பாரம்பரிய டாடா நிறுவனத்துக்கு வழிவிட்டு இதர பெரும் நிறுவனங்கள் ஒதுங்கிக்கொண்டன. கடனில் தத்தளித்து வந்த ஏர் இந்தியா நிறுனத்தை 2022 ஜனவரியில் டாடா கையகப்படுத்தியதுமே, புதுவிதமான வணிக மாதிரியை அமல்படுத்த முயற்சித்தது.

அவற்றின் அங்கமாக புதிய விமானங்களை வாங்குதல், துடிப்பான ஊழியர்களை பணிக்கு அமர்த்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது இருந்த சேவைக் குறைபாடு, தாமதம் உள்ளிட்டவற்றை படிப்படியாக நீக்க முயன்றது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே உரிய இந்த வேக மாற்றத்துக்கு உடன்படாத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவும் செய்தது.

இதற்காக 2 உபாயங்களை ஏர் இந்தியா நிறுவனம் முன்வைத்தது. முதலாவது விருப்ப ஓய்வு; மற்றொன்று திறன்களை மேம்படுத்திக்கொண்டு பணியில் தொடருதல். முதலாவது வாய்ப்பில் கணிசமான ஊழியர்கள் வெளியேறினார்கள். இரண்டாவது வாய்ப்பில் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டும் அவற்றுடன் உடன்படாத ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைகளுக்கு ஆளானார்கள்.

பணி நீக்கம்

இவ்வாறு இந்த 2 வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியாதவர்களில் ஒரு சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவதை ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் உறுதி செய்திருக்கிறார். இவர்கள் அனைவரும் ஏர் இந்தியாவின் விமானத்தில் பறக்காத ஊழியர்கள் ஆவர். இந்த ஊழியர்களின் எண்ணிக்கையை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிடாதபோதும், ஏஜென்சி தகவல்கள் அடிப்படையில் 180 முதல் 200 வரை அவை இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. மேலும் வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் எனவும் தெரிய வருகிறது.

டாடா கைக்கு சென்றதில் இருந்து மேற்கொள்ளப்படும் நிர்வாக சீரமைப்பு திட்டங்களால் ஏர் இந்தியா வளர்ச்சி கண்டு வருகிறது. இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களின் பங்குகள் சரிவு கண்டு வருகையில் ஏர் இந்தியா கணிசமாக உயர்வு கண்டு வருகிறது. அதே போன்று பிரத்யேக ஏஐ அறிமுகம் உள்ளிட்ட நவீனங்களையும் ஏர் இந்தியா அறிமுகம் செய்து வருகிறது. எனினும், விமானப் பயணியருக்கான சேவைக் குறைபாடு சார்ந்த புகார்களில் பழைய ஏர் இந்தியாவின் பாணியிலிருந்து இன்னமும் விடுபட முடியாது அந்த நிறுவனம் தவித்தும் வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

மும்பையில் நாளை இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!

மக்களவையில் விவாதங்கள் மற்றும் கேள்விகள் கிளப்பியதில்... தமிழக எம்பிக்களின் ஸ்கோர்கார்டு இதுதான்!

x