மிலாடி நபி: கோவையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பிரியாணி வழங்கல்


கோவை ஜிஎம் நகர் பகுதியில் பிரியாணியை பெற்று செல்ல குவிந்த பொதுமக்கள். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: மிலாடி நபி நாளையொட்டி, கோவையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடி நபி கொண்டாடப்படுகிறது.

மிலாடி நபி நாளையொட்டி, கோவை கோட்டைமேடு பகுதியில் 40 ஆயிரம் பேருக்கு பிரியாணி தயார் செய்வதற்காக, 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், டன் கணக்கில் அரிசி, தக்காளி, மசாலா பொருட்கள் 250 பாத்திரங்களில் சுமார் 300-க்கு மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சமைக்கப்பட் பிரியாணி பொதுமக்களுக்கு இன்று காலை வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று பிரியாணியை பெற்று சென்றனர்.

ஜி.எம்.நகர், பள்ளி வீதி பகுதியில் சுன்னத் ஜமாஅத் யூத் ஃபெடரேஷன் மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பின் தலைவர் ராஷிதுல் உலமா முஹம்மது அலி இம்தாதி ஹஜரத் தொடங்கி வைத்தார். இதில், அனைத்து சமயங்களை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

எஸ்.ஒய்.எஃப். பொதுச்செயலாளர் கோவை பைசல் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இனாயத்துல்லாஹ், சுன்னத் ஜமாஅத் யூத் ஃபெடரேஷன் தலைவர் அஹமது கபீர் உலூமி, கொள்கை பரப்பு செயலாளர் அப்துல் ரஹ்மான் உலூமி மற்றும் கோவை மாநகர உலமாக்கள், ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

x