தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமான நாட்களில் இருக்கும் கட்டணமே பண்டிகை காலங்களிலும் உள்ளது என்பதால் அந்த காலக்கட்டத்தில் அரசு பேருந்துகளில் அதிகம் பேர் பயணிக்கின்றனர். இதனால் அது போன்ற நேரங்களில் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்ய முடிவதில்லை. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் நாட்கள் 30 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை இதுவரையில் நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக 15.03.2024 முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்குப் பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது
எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர் செல்வதற்கு மிகக் குறைந்த கட்டணத்தில் எளிதாக செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. கடைசி நேர நெருக்கடிகளைத் தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வது நல்லது.