'மிதக்கும் சென்னை': டிரெண்டாகும் ஹேஷ்டேக்!


சாலையில் வெள்ளமென ஓடும் மழைநீர்

சென்னையில் நேற்று மாலை முதல் பெய்த கனமழையால் மக்கள் வசிக்கும் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று மிக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று மாலை சரியாக 6.30 மணிக்கு பெய்ய தொடங்கிய நிலையில், இரவு 11 மணி மழை வரை பெய்தது.

தெருக்களில் தேங்கியுள்ள மழைநீர்

சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்கப் பாலம் மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், துரைசாமி பாலம், அரங்கநாதன் பகுதிகளில் உள்ள சுரங்கப் பாலங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப் பாலம் மூடப்பட்டது.

ஆவடியில் 19 செ.மீ, மீனம்பாக்கத்தில் 16 செ.மீ., கத்திவாக்கம், மதுரவாயல், புழலில் 10 செ.மீ., கொளத்தூர், அம்பத்தூரில் 14 செ.மீ., அண்ணா நகர், திரு.வி.க. நகரில் 12 செ.மீ, கோடம்பாக்கத்தில் 11 செ.மீ. மழை பதிவானது.

சென்னை சாலை

இதன்காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக ஆவடி, வேளச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முதல்வர் தொகுதியான கொளத்தூரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழைநீருடன், கழிவுநீரும் தேங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு முதலே ஓய்வின்றி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், எக்ஸ் தளத்தில் #மிதக்குது_சென்னை என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட ₹4,000_கோடி_என்னாச்சு? என்ற ஹேஷ்டேக்கையும் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பலரும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசிய பேச்சைப் பதிவிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை... சீனாவில் வேகமெடுக்கும் புதிய வகை நோய்!

கனமழை... பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

x