வடா பாவ்... மும்பை தெருவோர உணவுக்கு உலகளாவிய அங்கீகாரம்


வடா பாவ்

மும்பை மாநகரத்தின் தெருவோர உணவாக புகழ்பெற்றிருக்கும் வடா பாவ், தற்போது உலகின் தலைசிறந்த சாண்ட்விச் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

வடா பாவ் என்பது மும்பையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று. சாய் உடன் வடா பாவ் ருசிப்பதில் மும்பைவாசிகள் அலாதி ஆர்வம் கொண்டவர்கள். காலை, மாலை, இரவு எந்நேரமும் வடா பாவ் பரிமாறும் சாலையோர உணவகங்கள் அங்கே நிறைந்திருக்கின்றன. வயிற்றை நிறைப்பதோடு, ருசியும் நிறைந்த இந்த சிற்றுண்டி எளிய மக்களின் குறைந்த செலவிலான பசியாறலாகவும் உள்ளது.

இவற்றுக்கு அப்பால் மும்பையின் பொது கொண்டாட்டங்கள், வீடுகளின் விழாக்கள் என சகலத்திலும் பிரத்யேக உணவாக வடா பாவ் பரிமாறப்படும். இதனால் மும்பைக்கு வருகை தருவோர் மத்தியிலும் வடா பாவ் உணவுக்கு வரவேற்பு உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க வடா பாவ் தற்போது உலகின் மிகச்சிறந்த சாண்ட்விச் உணவு ரகங்களின் தரவரிசைப் பட்டியலில் இணைந்துள்ளது. ’டேஸ்ட் அட்லஸ்’ அவ்வப்போது வெளியிடும் உலகின் பிரபலமான உணவு ரகங்கள் பட்டியலின் அங்கமாக, சிறந்த சாண்ட்விச்-களின் டாப் 50 பட்டியலில் மும்பையின் வடா பாவ் 19-ம் இடம் பிடித்துள்ளது.

கூடவே வடா பாவ் உணவு மும்பையில் முளைத்த கதையையும் டேஸ்ட் அட்லஸ் விவரித்துள்ளது. அதன்படி மும்பையின் அசோக் வைத்யா என்ற தெருவோர விற்பனையாளரால் வடா பாவ் முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக என்று டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது. 1960-களில் மும்பை ரயில் நிலையத்தில் அசோக் வைத்யா என்பவர் பிரத்யேகமாய் தயாரித்து விற்ற வடா பாவ், அதன் சிறப்பு காரணமாக நகரமெங்கும் பல்கிப் பெருகியது.

வடா பாவ் என்பதில் உள்ள வடை என்பது வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு கொண்டு தயாரிக்கப்படுகிறது. நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி, மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, கடுகு, கொஞ்சமே மிளகாய் தூள் என மசாலா கலவை இதில் அடங்கி இருக்கும். இந்த வடையை ரொட்டியில் வைத்து, சட்னி, மிளகாய் அலங்கரித்து சாண்ட்விச் பாணியில் சாப்பிடுகிறார்கள். இந்த எளிய உணவு முன்னதாக ஒற்றை இலக்க விலையில் இருந்தது. தற்போது ஆரம்பமே ரூ25-க்கு எகிறி உள்ளது. வடா பாவ் ரகத்தில் பலவகையிலான சைவ மற்றும் அசைவ ரகங்கள் சேர்த்தும் புதுமையின் பெயரில் விற்பனை செய்து வருகிறார்கள்

இதையும் வாசிக்கலாமே...

அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!

பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைசூர் மகாராஜா!

x