மருத்துவ உலகின் ஆச்சரியம்... 70 ஆண்டுகளாக இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த மனிதர் காலமானார்!


பால் அலெக்ஸாண்டர்

பெரிய கூண்டு வடிவிலான இரும்பு நுரையீரல் உதவியுடன் கடந்த எழுபது ஆண்டு காலமாக சுவாசித்து வாழ்ந்து வந்த மனிதர் நேற்று மரணம் அடைந்தார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்த பால் அலெக்சாண்டர் தனது 6 வது வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் கழுத்துக்கு கீழ்பகுதி முழுமையாக செயலிழந்தது. அதனுடனே வாழ்ந்துவந்த அவரால் ஒரு கட்டத்தில் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர் அவருக்கு 'ட்ரக்கியோஸ்டோமி' (Tracheostomy) என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

அப்போது எட்டு வயதான சிறுவன் பால் அலெக்சாண்டருக்கு சிலிண்டர் வடிவிலான ‘இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டது. செயல்படாமல் இருக்கும் நுரையீரலுக்கு செயற்கையாக வெளியில் இருந்து அழுத்தம் கொடுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து காற்றை சுவாசிக்கச் செய்யும் ஒரு வடிவமைப்பு தான் இந்த இரும்பு நுரையீரல். அந்த நேரத்தில் 18 மாதங்கள் பால் அலெக்சாண்டர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

கூண்டு வடிவிலான பெட்டிபோல வடிவமைக்கப்பட்ட அந்த இரும்பு நுரையீரலுடன் வாழ்வது மிகவும் கொடுமையானது. அதிலேயே வாழ்ந்த அவர் பள்ளிப் படிப்பு, அதன் பிறகு கல்லூரி படிப்பு, பிறகு சட்டப்படிப்பு என தொடர்ச்சியாக பெரும் முயற்சியில் படித்து முடித்தார். எழுத்தார்வம் உள்ள அவர் சில வரலாற்றுப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டவர்களின் நுரையீரல் ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும். அதன் பின்னர் இரும்பு நுரையீரலை அகற்றி விடுவார்கள். ஆனால் இவருக்கு நுரையீரல் சரியாகவே இல்லை. தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு மேல் இவரால் சொந்தமாக சுவாசிக்க முடியவில்லை. அதனால் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த இரும்பு நுரையீரலுடன் சுவாசித்து உயிர் வாழ்ந்து வந்தார்.

இப்போது அவருக்கு 78 வயது. சராசரியாக மனித வாழ்க்கை முடிவுக்கு வருவது போல அலெக்சாண்டரின் வாழ்க்கையும் நேற்று முடிவுக்கு வந்தது,நேற்று அவர் உயிரிழந்தார். 70 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் ஒரு மனிதர் வாழ்ந்தது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

x