ஆண்களை விட பெண்களுக்கு 24 சதவீதம் குறைவான ஊதியம்... உலக சுகாதார அமைப்பு கவலை!


ஊதிய முரண்

சுகாதாரப்பணியில் உள்ள பெண்களுக்கு ஆண்களை விட 24 சதவீதம் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு

ஆணில் சரி பாதி பெண்கள் என்று சொல்லப்பட்டாலும் சம்பளம், மதிப்பு உள்ளிட்டவைகளில் அவர்கள் கால காலமாக பின்னுக்கு இழுக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தான் நிஜம். பாலின ரீதியாக ஆண்களை விட பெண்களுக்கு ஊதிய இடைவெளி மற்றும் சிறப்பு சலுகைகள் இன்னும் கிடைக்காமலே உள்ளன.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலக சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பணியாளர்களில் பெண்கள் 67 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது சராசரியாக 24 சதவீத ஊதிய இடைவெளியை அவர்கள் எதிர்கொள்கின்றனர். உலகளவில், சராசரியாக, பெண்களின் வருவாயில் 90 சதவீதம் அவர்களின் குடும்ப நலனுக்காகவே செலுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செவிலியர்கள்

அத்துடன் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது பெரும்பான்மையான செவிலியர்கள் மற்றும் பெண் மருத்துவர்கள் தொழிலில் முன்னிலைப் படுத்தப்பட்டாலும், அவர்கள் தலைமைப் பாத்திரங்களில் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

மருத்துவர்கள்

மருத்துவத்துறையில் இன்னும் ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், மருத்துவத்துறையில் 25 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பெண்கள் பணிபுரிகின்றனர்.

இந்தியாவில், பெண்கள் தங்களுடைய மொத்த தினசரி வேலை நேரத்தில் சுமார் 73 சதவீதத்தை ஊதியம் இல்லாத வேலைக்காகச் செலவழித்துள்ளனர். அவர்களின் தினசரி வேலை நேரத்தின் 11 சதவீதம் ஊதியம் இல்லாத வேலையில் உள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு ஊதியம் பெறாத வேலைகளை வழங்குகிறார்கள். தொற்றுநோய் காலங்களில் போது ஆண்களுடன் ஒப்பிடும்போது ஊதியம் இல்லாத வேலை பெண்களுக்கு இரட்டிப்பாகிறது.

இங்கிலாந்தில் கோவிட் 19-ன் போது கிட்டத்தட்ட 4.5 மில்லியன் மக்கள் ஊதியம் பெறாத வேலையைச் செய்தனர், அவர்களில் 59 சதவீதம் பேர் பெண்கள். சுகாதாரப் பராமரிப்பில் உள்ள பெண்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை அதிக அளவில் அனுபவித்தனர்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து துறைகளிலும் பணியிட வன்முறையில் நான்கில் ஒரு பங்கு சுகாதாரத்துறையில் நிகழ்கிறது. அனைத்து ஊழியர்களில் குறைந்தது பாதி பேர் பணியிடத்தில் ஒரு கட்டத்தில் வன்முறையை அனுபவிப்பதாக புகார் அளித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு

குறிப்பாக, கொரியாவில் செவிலியர்களில் 64 சதவீதம் பேர் வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் 42 சதவீதம் பேர் வன்முறை அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ருவாண்டாவில் 39 சதவீத சுகாதாரப் பணியாளர்கள் பணியிட வன்முறைக்கு உள்ளாகிறார்கள். நேபாளத்தில், கணக்கெடுக்கப்பட்ட பெண் சுகாதாரப் பணியாளர்களில் 42 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

நர்சிங் துறையில் தரமற்ற வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்தங்கள் இல்லாதது பாலினக் குற்றங்களை கூட்டியுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

x