பகீர்... சிறுமியின் மூளையைத் தின்று, ஆளைக் கொன்ற அமீபா; நீச்சல்குளங்களை நாடுவோர் உஷார்!


சிறுமி ஸ்டெபானியா

இப்படியும் மரணம் சம்பவிக்குமா என்றஅதிர்ச்சியூட்டும் செய்திகளின் வரிசையில் கொலம்பியாவை சேர்ந்த சிறுமி ஒருவரின் இறப்பு சேர்ந்திருக்கிறது. நீச்சல் குளங்கள் மற்றும் சரியாக சுத்தம் செய்யப்படாத நீர்நிலைகளில் நீராடுவோருக்கு, அங்கு காத்திருக்கும் ஆபத்தை இந்த சிறுமியின் மரணம் பாடமாக உணர்த்தி இருக்கிறது.

ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் என்ற 10 வயது சிறுமி சதா துறுதுவென இருப்பார். டென்னிஸ், ஸ்கேட்டிங், பாலே நடனம், ஜிம்னாஸ்டிக் என பலவற்றிலும் தீவிரமான ஆர்வம் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக வேண்டும் என்ற கனவும் சிறுமிக்கு இருந்தது. ஆனால் சிறுமியின் அகால மரணத்தால் அது கனவாகவே போயிருக்கிறது.

நீச்சல் குளத்தில் நீந்தும் போது, அந்த நீரில் மீந்திருந்த அச்சுறுத்தும் அமீபாக்கள், மனித மூளையில் தொற்றினை ஏற்படுத்தியதில், இந்த பத்து வயது சிறுமியின் மரணம் சம்பவித்திருக்கிறது. அண்மையில் விடுமுறைக்காக வெளியே சென்றபோது, சிறுமி ஸ்டாபானியா சில விசித்திரமான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். முதலில் காது வலியும் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் வாந்தியும் அவருக்கு ஏற்பட்டது. இதனால் வீடு திரும்புவதற்கு முன்பாக காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

தாயுடன் ஸ்டெபானியா

அங்கே மருத்துவர் அளித்த மருந்துகள் அடுத்த சில தினங்களுக்கு ஸ்டெபானியாவுக்கு தற்காலிக விடுதலையை தந்தன. ஆனபோதும் அடுத்த 2 வாரங்களுக்கு படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதபடி முடங்கிப்போனார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மூன்று வாரங்களுக்கு மரணத்துடன் போராடி பின்னர் பரிதாபமாக இறந்து போனார்.

அவர் உடல்நலம் குன்றியது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை பலனின்றி இறந்தது ஆகிய அனைத்தும் குறித்து, மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னரே சிறுமியின் மூளையைத் தின்று, அவரைக் கொன்ற பகீர் அமீபாவின் பின்னணி தெரிய வந்தது. அமீபாவின் வகையினங்களில் ஒன்று மனிதர்களின் உடலினுள் புகுந்து உயிரையும் எடுக்கும் என்பது பலருக்கும் அதிர்ச்சி தரக்கூடியது.

மூளையைத் தின்னும் அமீபா

அமீபிக் என்செபாலிடிஸ் நோய் காரணமாக சிறுமி இறந்ததாக மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்தனர். மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து செயலிழக்க செய்து மரணத்தை விளைவிக்கும் ஓர் அரிய தொற்று இதுவாகும். மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நக்லேரியா ஃபொலேரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. இது சரியாக பராமரிக்கப்படாத நீச்சல் குளங்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீரில் காணப்படக் கூடும்.

சிறுமியின் தாய் டாட்டியானா கோன்சாலஸ் வசம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொலம்பியாவில் உள்ள சான்டா மார்ட்டாவின் நீச்சல் குளம் ஒன்றில் சிறுமி நீந்தி விளையாடியதே அமீபா தாக்குதலுக்கு அவரை ஆளாக்கி இருக்கிறது. மூக்கின் வழியாக இந்த அமீபா மூளையை தொற்றி மரணத்துக்கு வித்திட்டிருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த மூளையைத் தின்று ஆளைக் கொல்லும் அமீபா தென் அமெரிக்கா தேசத்தில் மட்டுமல்ல, அருகிலிருக்கும் கேரளாவிலும் மரணங்களை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே நீச்சல் குளங்களை நாடுவோர் உஷாராக இருப்பது நல்லது.

இதையும் வாசிக்கலாமே...


HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!

x